சனாதனத்திற்கு ஆபத்து வரும்போது.. விஜய் சொன்னது வேதனையே.. வானதி சீனிவாசன் கூறுவது என்ன?
Author: Hariharasudhan12 February 2025, 8:57 am
சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும்போது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர்: உலகமெங்கும் உள்ள தமிழர்களால், நேற்று தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் வெடிகுண்டு சம்பவம் நடந்தது.
அது மத அடிப்படைவாதியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. ஆனால், மாநில அரசு இன்னும் சிலிண்டர் வெடி விபத்து எனக் கூறுகிறது. கோவை மக்களைக் காப்பாற்றியவர் சங்கமேஸ்வரர் தான். 20 ஆண்டுகளாக நின்றிருந்த தேர்த் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், சமீப காலமாகத்தான் நடைபெற்று வருகிறது.
சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு நான் முன் வைத்திருந்தேன். ஆனால், கோரிக்கை வைத்து ஒரு வருடம் ஆகியும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நாடு, சனாதன தர்மத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஊறியது.
சமீப காலமாக சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக, இந்துக் கோயில்களுக்கு தொந்தரவு அளிப்பது, இந்துக்களை இழிவு செய்வது, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் சிறுபான்மை அரசியல் செய்து வருகின்றனர். திமுகவினர் மற்றும் அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சியினர், ஒரு மலையின் பெயரை மாற்றவே உறுதுணையாக இருப்பது வெட்கக்கேடான ஒன்று.
இதையும் படிங்க: அப்பா போல் விஜய் அண்ணா செய்தால் கூட்டணி.. விஜய பிரபாகரன் செக்!
சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும்போது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது. இந்துக் கோயில்கள் பிரச்னை பற்றி மற்ற எந்த கட்சிகளும் வாய் திறப்பதில்லை. யாருமே பேசாதபோது பாஜக, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் ஆகியவை போராடும் கட்டாயம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தர்.
பின்னர், தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “தைப்பூசத்திற்கு வாழ்த்து சொல்லக்கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு நாங்கள் என்ன கருத்து சொல்வது? அவருடைய தேர்தல் வெற்றிக்காக அவர்கள் சந்திக்கிறார்கள்” என்றார்.