சாக்லேட் பாய் மாதவனின் ரசிகைகள் கவனத்திற்கு.. கோவையில் படமாகும் ஜி.டிநாயுடு பயோபிக்!
Author: Hariharasudhan13 February 2025, 7:00 am
ஜி.டி.நாயுடுவின் பயோபிக் படத்தில் மாதவன் நடிக்க உள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
கோயம்புத்தூர்: ‘இந்தியாவின் எடிசன்’ என அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில், நடிகர் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடிக்கிறார். இப்படத்தை, கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்குகிறார்.
வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தரப்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இதன் முன் தயாரிப்புப் பணிகள் (Pre-Production) இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.
தயாரிப்பாளர் விஜய் மூலன் படத்தைப் பற்றிக் கூறுகையில், “பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்த இந்தியர்களை இன்றைய தலைமுறை அறிந்து கொள்வதற்கான படங்கள் தற்போது தேவையாக இருக்கிறது. அப்படிப்பட்ட படமாகத்தான் ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியாவை உருவாக்குகிறோம்.
இந்தப் படத்தில் மாதவன் தவிர முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. ஜெர்மனி உள்பட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். முன் தயாரிப்பு பணிக்கே இரண்டு வருடம் ஆகிவிட்டது. இம்மாதம் கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் தலைப்பை வரும் 18ஆம் தேதி அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் முரளிதர் சுப்ரமணியம் பிரபல ஊடகத்திடம் கூறுகையில், “ஜி.டி.நாயுடு தொடர்பாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் இடத்திலேயே 95 சதவீத படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மீதம் 5 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளது.
இதையும் படிங்க: இனி நம்ம ஆட்டத்த மட்டும் பாருங்க…ஜி வி பிரகாஷின் தெறிக்க விடும் சம்பவம் LOADING…!
ஒரு சிறிய அளவிலான வெளிநாட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவில் எடுக்கப்படும் படப்பிடிப்புகள் பிப்ரவரி 18 முதல் நடைபெற இருக்கிறது. ஜி.டி.நாயுடு குறித்த தகவல்களைச் சேகரிக்கவும், முழுமையாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்ய இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் ஐந்து வருடங்கள் ஈடுபட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படமாக உருவான நம்பி – ராக்கெட்ரி விளைவு என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே கூறலாம்.