அறிவாலயத்தின் செங்கலை உருவும் வரை.. அண்ணாமலை சவால்.. திமுகவின் பதில் என்ன?

Author: Hariharasudhan
13 February 2025, 11:45 am

திமுகவை அழிக்க புறப்படுபவர்கள், தங்களின் அழிவுக்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றனர் என அண்ணாமலைக்கு சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

சென்னை: சென்னையின் திருவான்மியூரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் ஐந்து முறை தமிழகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 8 ஆயிரத்து 54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 585 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் மாநில நிதிப்பகிர்வு 5 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஆண்டு, மாநில நிதிப்பகிர்வு, 25 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்.

மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு 5 மடங்கு அதிகரித்துள்ளது. முதலமைச்சரே எதற்காக பொய் பேசுகிறீர்கள்? வட்டிக்கடை நடத்துகிறீர்கள் என்று முதலமைச்சர் கேட்கிறார். ஆளுநரும் இருக்க வேண்டும், இந்த அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார்.

Sekar Babu on Annamalai

ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் அவர் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில்தான் துண்டைப் போட்டு நீங்கள், உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போகிறீர்கள்.

பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்குத் தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை, ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026இல் சிறைக்குச் செல்வதைப் பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.

இது அரசியல் மேடையில் பேசுபொருளான நிலையில், சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள். அண்ணாமலையைப் போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல.

திமுகவின் ஆலயமாகக் கருதப்படுகிற அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாத அவரால், எப்படி செங்கல்லைப் பிடுங்க முடியும்? இரும்பு மனிதர் என போற்றப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், 75 ஆண்டுகள் கடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். திமுகவை அழிக்க புறப்படுபவர்கள், தங்களின் அழிவுக்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு கொடூர ராகிங்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

இவருடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மிருக பலத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பர். முதலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள வேண்டும்.

அவர் எங்கு நின்றாலும், தமிழ்நாட்டில் அவரே புறமுதுகிட்டு ஓடச் செய்ய திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவரை மண்ணை கவ்வ வைப்பார்” எனப் பதில் அளித்தார்.

  • Ilaiyaraaja Chennai High Court case எல்லாமே இசை தான்…நீதிபதியின் கேள்விக்கு இளையராஜா நச் பதில்..!
  • Leave a Reply