ஸ்கேன் சென்டரில் ஊசி.. பிரிந்த சிறுவனின் உயிர்.. பெற்றோர் குற்றச்சாட்டும், நெல்லை அரசு மருத்துவமனையின் விளக்கமும்!
Author: Hariharasudhan13 February 2025, 5:10 pm
நெல்லை அரசு மருத்துவமனையில் கழுத்தில் கட்டி என அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் மலையடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (39). விவசாயியான இவரது 3வது மகன் பொன்மாறன் (4). இந்தச் சிறுவனுக்கு கழுத்தில் சிறிய கட்டி இருந்ததால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை சிறுவனுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு, திடீரென சிறுவன் உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை டீன் அலுவலகம் முன் அமர்ந்து, இரவு நேரத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இது குறித்து சிறுவனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறுவனின் கழுத்தில் இருந்த கட்டியை குணப்படுத்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி ஸ்கேன் எடுக்கச் சென்ற மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர் ஒருவர், சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளார்.
பின்னர், திடீரென சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். ஆனால், ஸ்கேன் மையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை. எனவே, எங்கள் பிள்ளை இறந்தது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால்தான்” என குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று காலையிலும், சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரேவதிபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொன்மாறன் 10ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பொதுவான லிம்ஃபாடெனோபதி அல்லது ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா (ஐயமான நிலை) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இந்த லிம்போமா (Lymphoma) என்பது, புற்றுநோய்களின் (Blood Cancer) ஒரு வகை. இது நீரிழிவு குழாய்கள் (Lymphatic System) மற்றும் நீரிழிவுக் கொழுந்து (Lymph Nodes) ஆகியவற்றைப் பாதிக்கும். மேலும், இது நீரிழிவுக் குழாய்களில் உள்ள லிம்போசைட்டுகள் (Lymphocytes) என்ற வெள்ளையணுக்களையும் பாதிக்கிறது. இந்தப் புற்றுநோய் நீரிழிவு கொழுந்து, ஸ்ப்ளீன் (Spleen), எலும்பு மஞ்ஜை (Bone Marrow) மற்றும் பிற உறுப்புகளில் இருந்து உருவாகலாம்.
அது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு கழுத்து, கையிடுக்குப் பகுதிகளில் குழாய் போன்ற வீக்கம் காணப்படும். இந்த நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி காலை, கான்ட்ராஸ்ட் சிடி ஸ்கேன் (கழுத்து மற்றும் மார்பு) எடுக்கப்பட்டது. ஐவி கான்ராக்ஸ்ட் மருந்து குழந்தைக்கு செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திடீரென வியர்வை, அதிர்வு போன்ற தீவிர நிலை குழந்தைக்கு உண்டானது.
உடனடியாக, சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அதில் ஷாக் (அதிர்ச்சி) நிலையில் குழந்தை சேர்க்கப்பட்டது. அப்போது, புற்றுநோய் நீண்ட நாள்களாக இருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் திடீரென எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ கையை வெட்டிய கும்பல்.. சிவகங்கையில் பரபரப்பு!
குழந்தையை அதிநுட்ப சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, வெண்டிலேட்டர் (சுவாச உதவி கருவி) மற்றும் அட்ரினலின் ஆதரவும் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் அவரை ஆயிரம் சதவீதம் காப்பாற்ற முயன்றார்கள். மயக்கவியல் மருத்துவர், இதய நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை பெற்றே குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிறுவன் நிலை மேலும் மோசமடைந்து, இதய நிறுத்தம் (Cardiac Arrest) ஏற்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகும் குழந்தை இரவு 9.10 மணிக்கு உயிரிழந்தது. எனவே, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது என பரவும் தகவலில் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.