சோளக்காட்டில் 10ம் வகுப்பு மாணவி.. 12ம் வகுப்பு மாணவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கரூரில் அதிர்ச்சி!
Author: Hariharasudhan24 February 2025, 12:12 pm
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர், அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவருக்கு அதே பகுதியைச் 12ஆம் வகுப்பு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இருவரும் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால், மாணவி வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இரவு மாணவியை போனில் தொடர்பு கொண்ட 12ஆம் வகுப்பு மாணவர், அவரது வீட்டிற்கு அருகேயுள்ள சோளக்காட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
மேலும், மறக்க முடியாத பரிசு ஒன்றை உனக்கு வாங்கி வைத்துள்ளேன் என்றும், அதனை மட்டும் வாங்கிச் செல் என்றும் அம்மாணவி மாணவருக்கு அழைப்பு விடுத்துக் கூறியுள்ளார். எனவே, அந்தப் பரிசினைப் பெறுவதற்கு மாணவி சோளக்காட்டிற்குள் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு 12ஆம் வகுப்பு மாணவர் மற்றும் மேலும் இரண்டு இளைஞர்கள் இருந்துள்ளனர். பின்னர், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் பயந்து போன மாணவி கூச்சலிட்டுள்ளார். இதனால் அச்சம் அடைந்த மூவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!
அப்போது, அவர் மீண்டும் சத்தம் போட்டுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து, கழுத்தில் படுகாயத்துடன் கிடந்த மாணவியை மீட்ட அப்பகுதி மக்கள், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மாணவி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், இது குறித்து பாலவிடுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 12ஆம் வகுப்பு மாணவரைப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.