அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!
Author: Hariharasudhan25 February 2025, 5:53 pm
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டம், எம்.புதூர் மற்றும் டி.புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் அப்புராஜ். இந்த இளைஞர்கள் இருவரும், கடந்த மாதம் இறுதியில் காணாமல் போனதாக, அவர்களது பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இளைஞர்கள் இரண்டு பேர் காணாமல் போன விவகாரத்தில், அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதன் பேரில், காணாமல் போன இளைஞர்களின் நண்பர்கள் ஐந்து பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த விசாரணையில், அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரையும் கொன்று புதைத்தது பெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், நெய்வேலி என்எல்சி அருகே உள்ள பூமங்கலம் என்ற பகுதியில் இருவரது உடல்களையும் புதைத்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கையிலும் காலிலும் விலங்கா..? நிர்வாகிகள் விலகல்.. சீமான் காட்டமான பதில்!
இதனையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு புதைக்கப்பட்ட இருவரது உடல்களையும் தோண்டி எடுத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.