தாய்மொழியைத்தான் பாஜக திணிக்கிறது.. அண்ணா பெயர் குறைந்தது.. அண்ணாமலை பேச்சு!

Author: Hariharasudhan
26 February 2025, 4:58 pm

தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பாஜகவின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இண அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, விழாவில் பேசிய அண்ணாமலை, “மாவட்டத் தலைவர் அறையில் இருந்து எல்லோருக்கும் தேவையான அறைகள் அதில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொருவரும் படிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக லைப்ரரி அமைக்கப்பட்டு உள்ளது.

நாம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம், அதனால்தான் நம் மீது அதிகமான கற்களையும் வீசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மக்கள் மனங்களில் தங்க ஆரம்பித்துவிட்டது. அனைத்து இல்லங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி குடியிருக்கிறார். எதிர்க்கட்சி நண்பர்கள், பாரதிய ஜனதாவால் மக்களிடம் போக முடியவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்களின் எந்த திட்டமும் மக்களிடம் சென்று சேரவில்லை.

Annamalai on Three language policy

பிரதமர் கஷ்டப்பட்டு யோசித்து நடுத்தர மக்களுக்கு வாங்கக்கூடிய மருந்து விலையை கூட குறைவாக இருக்க வேண்டும் என பிரதம மந்திரி மருந்தகத்தைத் தொடங்கினார். ஆனால் இங்கு இருக்கக் கூடிய முதல்வர் ஸ்டாலின், அந்த மருந்தகங்களுக்கு அனுமதி கூட கொடுக்கவில்லை, அப்படி வந்தால் அதற்கு தடையும் போட்டுவிடுவார்.

ஆனால் நேற்றைய தினம் முதலமைச்சர் மருந்தகம் என்று காப்பி அடித்து அதே மருந்தகத்தை தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறார். நாங்கள் செய்தால் அது குற்றம், ஆனால் அந்தத் திட்டத்திற்கு பெயரை மாற்றி நீங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள். ஆனால் அதையும் கூட நாங்கள் எப்படியாவது மக்களிடம் திட்டம் சேர்ந்தால் சரிதான் என்று கருதுகிறோம்.

பிரதமர் எப்பொழுதும் அவர் பெயரைக் கூட நரேந்திர மோடி மக்கள் மருந்தகம் என்று போட்டது இல்லை. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து தலைவர்களின் பெயரை வைக்காமல், பாரதப் பிரதமர் திட்டம் என்று கொண்டு வந்தார், அதற்குப் பிறகு தான் தமிழகத்தில் அண்ணா பெயர் எல்லாம் குறைந்து, முதலமைச்சர் என்ற பெயர் சிறிய அளவில் தென்படுகிறது.

இதுதான் பிரதமர் இந்தியாவில் ஏற்படுத்தி இருக்கும் மிகப்பெரிய அரசியல் புரட்சி. தமிழகத்தில் கலைஞர் நூலகம் என பெயர் வைப்பவர்கள், மருந்தகத்திற்கு முதலமைச்சர் மருந்தகம் என பெயர் வைத்து இருப்பதிலேயே நாம் ஜெயித்து விட்டோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதனால் நாம் கடுமையாக பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. அதேபோல தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான். அந்தக் கைதை கூட நாங்கள் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்கிறோம்.

பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026இல் வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். முதலமைச்சர் பட்டப் பகலில் நாம் இந்தியை திணிப்பதாக கபட நாடகம் போடுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மூன்றாவது முறையாக காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றிருக்கிறது.

சிங்கப்பூர், அமெரிக்கா, என எங்கு சென்றாலும் பிரதமர் தமிழ் மொழி குறித்து ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறார். அவ்வளவு தமிழ் மொழியை நேசிக்கக் கூடிய பிரதமர் நமக்கு இருக்கிறார். நவம்பர் 12, 2022ல் அமித்ஷா சென்னையில் ஸ்டாலினுக்கு ஒரு அறிவுரை கொடுத்தார், மருத்துவக் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இரண்டையும் உங்களுடைய சொந்த மொழியில் சொல்லிக் கொடுங்கள் எனக் கூறினார்.

அப்படி இருக்கும் போது அவர் எப்படி இந்தியைத் திணிப்பார். தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ சகோதர சகோதரிகள் சி.ஆர்.பி.எப் போன்ற பணிகளுக்கு செல்கிறார்கள், அதையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. அப்படிச் செல்லும் பணிகளுக்கான பரிச்சை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது,

மத்திய அமைச்சர் அமித் ஷா பதவிக்கு வந்த பிறகு 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் எனக் கொண்டு வந்தார். அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி இந்தியை திணிப்பார்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் உண்மையில் தாய் மொழியைத் தான் திணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அமித்ஷா அவர்களுக்கு 133 திருக்குறள் அதிகாரம் பொறிக்கப்பட்ட பொன்னாடையைதான் இன்று வழங்கினோம். 247 எழுத்துக்களால் வரையப்பட்ட ஓவியம் கொடுக்கப்பட இருக்கிறது. இது பாஜக தமிழை வளர்க்கும் தமிழோடு இருக்கும் என்பதற்கு, கடைக்கோடி தொண்டனிலிருந்து பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு தொண்டனும் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஏனென்றால், உங்களுடைய ஆட்சியில் தமிழ் கெட்டுவிட்டது. தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்குச் சென்று விட்டார்கள். முதல்வர் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும் சொந்தப் பள்ளியில் இந்தி திணிக்கப்படுகிறது. இது மக்களுக்கு தெரிந்தவுடன், முதலமைச்சர் அடுத்ததாக தொகுதி மறுசீரமைப்பு என்ற பிரச்னையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

2026 இல் திமுக என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி, ஒரு மனிதன் எந்த வேலையும் இல்லை என்றால், அந்த சமயத்தில் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவான் என்பதற்கு உதாரணமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

இதையும் படிங்க: கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த B4U!

டெல்லியில் கூட அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார், மோடி ஜெயிக்க வேண்டும் என்றால் இன்னொரு ஜென்மம் எடுத்து வர வேண்டும் எனக் கூறினார். ஆட்சியில் இருந்து கீழே விழுவது அவ்வளவு பெரிய அடியாக இருக்கும், அதுபோலத்தான் இங்கும் நடக்கப் போகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுவிட்டார், மம்தா பானர்ஜியும் ஸ்டாலின் ஆகிய உங்களோடு சேர்ந்து 2026இல் நிச்சயம் வீட்டிற்குச் சென்று விடுவார். மோடி வந்ததற்கு பிறகு தமிழகத்தில் வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும்“ என கூறினார்.சிவராத்திரி நாளிலே எல்லாம் வல்ல சிவன் அருள் நம் பக்கம் இருக்கும் என கூறினார்” என்றார்.

  • Lucky Baskhar Movie OTT Record தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!
  • Leave a Reply