2 நாளுக்கு முன்னாடி கூட ஆள் அனுப்புனாரு சீமான்.. விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ!
Author: Hariharasudhan28 February 2025, 9:44 am
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பேச்சுவார்த்தைக்கு ஆட்களை அனுப்பிவிட்டு பத்திரிகையாளர்களிடம் அவ்வாறு பேசியதாக விஜயலட்சுமி சீமான் குறித்து கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், “முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, பேசியபடி மாதம் 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பின்னர் பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.
உங்கள் பொன்னான வாயால்தான் என்னை பொண்டாட்டி, பொண்டாட்டி என்று அழைத்தீர்கள். அதன் பின்பு, என்னிடம் வீடியோ கேட்டீர்கள். இப்போது திமுக தான் என்னை அழைத்து வந்தது எனச் சொல்கிறீர்கள். திமுக ஒன்றும் என்னிடம் வந்து மாதம் ரூ.50 ஆயிரம் கொடுக்கவில்லை.
இப்போ என்ன அப்டினா, அந்த பொம்பளய நேர்ல வரச் சொல்லுங்கனு சொல்றீங்க. நான் இங்கதான் இருக்கிறேன் சீமான். நேரில் வாங்க.. உங்களை நேரில் பார்த்து, என்ன பாத்தா எப்படிடா இருக்குனு கேக்க நான் ரெடியா இருக்கேன். 2 நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு, அப்போ பிரஸ் மீட்ல என்னையப் பத்தி பேசி இருக்கிறீர்கள்.
நான் அப்படி, இப்படின்னு பேசிருக்கீங்க. என்னுடைய பாவம் சும்மா விடாது. இன்னும் என்னலாம் பண்ணப்போகுதுனு பாருங்க. சீமான் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கணும்” எனப் பேசியுள்ளார்.
சீமான் – விஜயலட்சுமி விவகாரம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை 2012ஆம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் இதன் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதன்படி, வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாடு கூட தாய்மொழியில்தான் கத்தும்.. வடிவேலு பரபரப்பு பேச்சு!
அந்த வகையில், நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் நேரில் சென்று, அவரிடம் விசாரணை நடத்தினனர். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்ததில், முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயலட்சுமியுடன் நேரில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டியதை அடுத்து ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, அவரது வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.