அமித்ஷாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்த காவலர் தற்கொலை முயற்சி.. கோவையில் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2025, 10:38 am
ஈரோடு மாவட்டம் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருபவர் பார்த்திபன். இவர் அங்கு உள்ள ஒரு காவல் துணை கண்காணிப்பாளரிடம் வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கோவை ஈசா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். வெளி மாவட்ட காவலர்கள் உட்பட 4,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஈரோட்டில் இருந்து பார்த்திபன் கோவை வந்து ஆலாந்துறை அருகே உள்ள மத்தவராயபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இதற்கு இடையே சம்பவத்தன்று காவலர் பார்த்திபன் திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே அவர் அருகில் இருந்த போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பார்த்திபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பார்த்திபனின் மாமியாருக்கு இருதய கோளாறு இருந்ததாக தெரிகிறது. குடும்பத்தை பார்க்காமல் மாமியாரின் மருத்துவ சிகிச்சைக்கு செல்லவும் பார்த்திபன் விடுப்பு கேட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால் விடுப்பு கிடைக்காமல் கோவையில் மூன்று நாள் பாதுகாப்பு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
