’கலெக்டர் நான் சொல்றதத்தான் கேட்கனும்..’ திமுக நிர்வாகி பேசியதாக வெளியான ஆடியோ.. அண்ணாமலை கேள்வி!

Author: Hariharasudhan
28 February 2025, 12:29 pm

தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்ம செல்வன் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுகவில் கட்சி ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு, கடந்த வாரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தர்ம செல்வன் என்பவர் தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன், கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஆகியுள்ளது.

இவ்வாறு தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில், “மாவட்டத்தில் எந்த அதிகாரிகளும் என்னை மீறி செயல்படக் கூடாது. நீங்கள் நினைக்கும் ஆட்களைச் சொல்லி மாற்ற முடியாது. நான் லெட்டர் வைத்தால்தான் மாற்ற முடியும்.

Annamalai and DMK

மாவட்ட ஆட்சியர், எஸ்பி என அரசு அதிகாரிகள் வரை அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். எந்த அதிகாரியும் நான் சொல்வதை மீறி கு** கூட விட முடியாது. கேம் விளையாட இங்கு இடமில்லை. கேம் விளையாடினால் கதை முடிந்துவிடும்.

இதையும் படிங்க: நான்தான் சம்மனைக் கிழிக்கச் சொன்னேன்.. சீமான் மனைவி ஆவேசப் பேட்டி!

நான் சொல்வதை கேட்கும் நபர்களுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு. கேட்காத பட்சத்தில், அவர்கள் உடனடியாக இங்கிருந்து தூக்கியடிக்கப்படுவார்கள். எந்த அலுவலகத்தில் எந்த விஷயம் நடந்தாலும் எனக்கும், ஒன்றியச் செயலாளருக்கும் தெரிய வேண்டும். ஒரு அதிகாரிகூட நான் சொல்வதைக் கேட்காத பட்சத்தில் இங்கு இருக்கமாட்டார்கள்” என உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆடியோவை மேற்கோள்காட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?

மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • GV Prakash Kingston Trailer Launch ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!
  • Leave a Reply