What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?
Author: Hariharasudhan1 March 2025, 11:39 am
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார்.
பெரம்பலூர்: பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது தொடர்பாக பேசிய சரத்குமார், “விஜய் எதையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
அன்புச் சகோதரர் விஜய் ரொம்பவே பாப்புலரான நடிகர் எனக்கூறிவிட்டு, பிரசாந்த் கிஷோர் இந்தி தெரியாத ஒருத்தர், இல்ல.. உனக்கு வந்து அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து உனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா? டேய், எங்கடா இருக்கீங்க நீங்களாம், யாருக்கிட்டட ஃபிராடுத்தனம் பண்றீங்க?
What Bro? Why bro? சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம். பிரசாந்த் கிஷோர் திமுகவை ஜெயிக்க வைத்ததுபோல விஜய் கட்சியை ஜெயிக்க வைப்பாரா? வரும் தேர்தலில் அதையும் பார்த்துவிடுவோம்” எனப் பேசினார்.
வடிவேலு மறைமுக தாக்கு: முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் வடிவேலு, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு என்ற பெயரில், காக்கா காக்கான்னு தான் கத்தும் என விஜயை மறைமுகமாக கூறியதாக, அவரது ரசிகர்கள் மற்றும் தவெகவினர் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர்.
மேலும் சரத்குமார் பேசுகையில், “நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசால் தமிழ் மொழி வளர்க்கப்படவில்லை. மத்திய அரசு இந்தி மொழியைத் திணிக்கவில்லை.
தார் ஊற்றி அழித்தாலும் நாட்டில் 70 கோடி மக்கள் பேசும் இந்தி மொழியை அழிக்க முடியாது. பழமையான தமிழ் மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. மத்திய அரசு எந்தவொரு சிறந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும் எதிர்ப்பது என்று திமுக எடுத்துக்கொள்கிறது.
இதையும் படிங்க: 75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம், ஒழுங்குச் சீர்கேட்டை மறைக்க நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநிலத் தலைவரும், தேசியத் தலைவர்களும் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன். பாஜக மாநிலத் தலைவராக மீண்டும் அண்ணாமலை வரும்போது, அவரை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது எனது முதன்மையான கடமை” என்றும் கூறினார்.