எங்களை விட்டுப் போகாதீர்கள்.. தேனியிம் ஓபிஎஸ்சை கடுமையாக தாக்கிப் பேசிய இபிஎஸ்!

Author: Hariharasudhan
3 March 2025, 12:10 pm

எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

தேனி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தேனி பெரியகுளம் சாலையில் உள்ள மதுராபூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டம் மாநாடு போல் உங்களால் காட்சியளிக்கிறது. இதனைப் பார்த்தால் பல பேருக்கு எரிச்சல்தான் வரும்.

எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல், அவரை வேறு யாரும் ஏற்க மாட்டார்கள் என இங்கே இருக்கும் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நான் சில தகவல்களைக் கூறுகிறேன், எது சரி? எது தவறு? என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று தர்மயுத்தம் தொடங்கினார்.

அவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் செல்வார். பெரும்பான்மை ஆதரவுடன் எனக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக தீர்மானம் கொண்டு வந்தபோது, ஜெயலலிலதா அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட மனிதர், இவர்.

EPS Vs OPS

ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுகவிற்கு துணை நின்றவர் இந்த மண்ணில் பிறந்தவர். நானா துரோகம் செய்தேன்? அதற்கும் மேலாக இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து பணிகளைச் செய்தவர். இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் சொத்துதான் தலைமை கழகக் அலுவலகம்.

அந்தச் சொத்தை ரவுடிகளைக் கொண்டு சென்று அடித்து நொறுக்கி, திமுக உதவியுடன் சீல் வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது துரோகம் இல்லையா? எங்களை விட்டுப் போகாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டோம். நீங்களாகத்தான் போனீர்கள். ஜெயலலிதாவிற்கு விசுவாசம் விசுவாசம் எனக் கூறிக்கொண்டு, 89-ல் ஜெயலலிதா போடி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது நீங்கள் யாருக்கு வேலை செய்தீர்கள்?

வெண்ணிறாடை நிர்மலாவுக்கு அவர் வேலை செய்தார். இவரா ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தவர்? அதே சேவல் சின்னத்தில் 89ல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான். நீங்கள் 2001ல் தான் எம்எல்ஏ. நான் 89லேயே எம்எல்ஏ. உங்களைவிட 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் சட்டமன்ற உறுப்பினர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர், வாரியத் தலைவர் என பல பதவிகளை வகித்தவன் நான். அவருக்கு பதவி இல்லையென்றால் கட்சியைப் பார்க்க மாட்டார். அவரை மட்டும்தான் பார்த்துக் கொள்வார். 2001ல் எனது தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, எனக்கு வேறு தொகுதி கொடுத்தார்கள். ஆனால், நான் போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு வேலை செய்து வெற்றி பெற வைத்தேன்.

இதையும் படிங்க: ஹோட்டல மாத்துங்க.. கறாராக சொன்ன அஜித்.. அதிர்ச்சியில் கோலிவுட்!

தலைமை என்ன சொல்கிறதோ, அதைச் செய்வதுதான் தொண்டனின் கடமை. அதனால்தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். துரோகம் செய்தவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இது மூழ்குகிற கப்பல் இல்லை. கரை சேருகிற கப்பல். இந்தக் கப்பலில் ஏறுகிறவர்கள் பிழைத்துக் கொள்ளலாம். ஏறாதவர்கள் நடுக்கடலில் சென்று விடுவார்.

2026ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இதே மேடைக்கு நான் மீண்டும் வருவேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது” எனக் கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Leave a Reply