வாய்க்கால் தகராறு.. ஜாமீனில் வந்த பாஜக நிர்வாகி மீண்டும் கைது!
Author: Hariharasudhan6 March 2025, 5:10 pm
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுார் ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், அவரை தாக்கியும் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, குணா மீது சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார், ரவுடி படப்பை குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: புது காதலி + பழைய காதலியுடன் 4 வருட காதலியைக் கொன்ற காதலன்.. என்ன நடந்தது?
பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும், ரவுடி படப்பை குணா, பாஜக காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார். அதோடு, இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.