14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்.. சினிமா பாணியில் தாலி கட்டிய நபர் செய்த காரியம்.!(வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan6 March 2025, 6:10 pm
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தொட்ட மஞ்சு மலைகிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர்.
அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது.
பின்னர் இன்று அந்த சிறுமியை, மலைகிராமத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவரை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வலுக்கட்டாயமாக தோளில் தூக்கி கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி கதறி அழுததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்ளில் பரவவிட்டுள்ளனர்.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமையை கட்டாய திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மகேஷ் மற்றும் சிறுமியின் தாய் நாகமாகிய மூன்று பேரை கைது செய்தனர்.