இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!
Author: Udayachandran RadhaKrishnan6 March 2025, 7:27 pm
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது கூட தேசிய கல்விக் கொள்கையில் ஆங்கிலம் மற்றும் தமிழும் மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் ஏதேனும் ஒன்று இருக்கும் என தெரிவித்தநிலையில் அப்போது திமுக வாயை மூடிக்கொண்டுஇருந்தது.
இருமொழிக் கொள்கை என்று கூறும் முதல்வர் நடத்தும் சன்சைன் மண்டேஸ்வரி பள்ளியில் ஹிந்தியை என் கற்றுக் கொடுக்கிறீர்கள், உங்களது தந்தை கொண்டுவந்த சமச்சீர் கல்வி கொள்கையில் தானே ஆரம்பித்து இருக்க வேண்டும்.
வியாபாரம் நோக்கில் தான் சிபிஎஸ்இ பள்ளியை ஆரம்பித்து இருக்கிறீர்கள் ஹிந்தி கற்றுக்கொடுத்தால்தான் ஒன்றரை லட்சம் கட்டணம் வாங்க முடியும், எள்ளளவு தமிழ் மொழிக்கல்வியில் உங்களுக்கு பற்று இருக்கும்பட்சத்தில் உங்களது சன்சைன் பள்ளியில் சமச்சீர் கல்வியை ஆரம்பியுங்கள் என சவால்விடுத்தார்.
நேற்றைய தினம் சர்வ கட்சி கூட்டம் என்ன அவசியம்? மொழி கொள்கையில் திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள் இனி உங்களது பருப்பு வேகாது, மக்கள் தெளிந்துவிட்டார்கள். ஹிந்தி கற்காமல் இருக்கவேண்டும் என கிராமப்புற மக்கள் கேள்விஎழுப்புகின்றனர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சுருங்கி கொண்டு வருகிறது. அதனை சீர்கொணர மும்மொழிக்கல்வி அவசியமாகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளது.
தமிழ் பக்தனை போலவே பகல் வேஷம் போட்டு ஏமாற்றும் திமுகவின் வேடம் மக்களிடம் எடுபடவில்லை, கம்ப்யூட்டர் பயிற்சியில் சென்டருக்கு தேவையான ஆசிரியைக்கு பணம் அரசு வழங்குகிறது.
ஆனால் அந்த பணம் முழுமையாக சென்றடையவில்லை. மத்திய அரசின் திட்டங்களை மற்றும் பணத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 60ஆயிரம், 70ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது ஆனால் சரியான தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் 10 – 15ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது, தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்களால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய் முற்றிலும் நிர்வாகம் தோற்றுப் போய்விட்டது.
இந்தியாவில் குஜராத் மாநிலம் தான் போதை பொருள் பயன்பாடு அதிகம் இருந்த மாநிலமாக இருந்த நிலையில் தற்போது தமிழகம் முதல் இடத்திற்கு வந்துள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.
முற்றிலும் தோற்றுப் போன ஒரு அரசாங்கம் தமிழகத்தில் நடைபெறுகிறது. நேற்றையதினம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தமிழகத்தில் ஒரு பேசுபொருளாக கூட இல்லை. சென்னையில் மும்மொழிக்கொள்கைக்கான ஆதரவு கையெழுத்து இயக்கம் நடைபெறுவதை தடுத்து முன்னாள் ஆளுநர் தமிழிசை அவர்களை பெண் என்றும் பாராமல் அலைக்கழித்து கைது செய்தது. தமிழகத்தில் ஒரு எதேச்சை அதிகாரம் நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் ஒரு பாசிஸ்ட் அரசாங்கம் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவின் முன்னணியின் குடும்பத்தினர் நடத்திய 48 பள்ளிகள் பட்டியல்கள் கொடுத்துள்ளேன் அவர்கள் தற்போது வேஷம் கட்டி வருகிறார்கள், தமிழை வெறும் பேசும்மொழியாக மாற்றிவிட்ட ஒரு தமிழ் விரோதிகள் திமுக அரசு.
தமிழகத்தில் இருமொழிக்கொள்கையில் படித்த அப்துல் கலாம் சுந்தர் பிச்சை போன்றவர்கள் அவர்களது சொந்த முயற்சியால் தான் முன்னேறி வந்தார்கள் தவிர திராவிடியன் பிச்சையினால் அல்ல, கனிமொழியின் மகன் ஏன் அரசு பள்ளியில் படிக்காமல் சிபிஎஸ்சி ஆங்கிலபள்ளியில் படித்தார் என கேள்வியெழிப்பினார்.
தமிழுக்காக திமுகவினர் என்ன செய்துள்ளீர்கள் ஆனால் ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் எம்ஜிஆர் ஆட்சியின்போது மட்டுமே கொண்டு வரப்பட்டது, தமிழுக்கு விரோதமாகவே எப்போதும் செயல்பட்டவர்கள் திமுகவினர்.
பிஎம்ஸ்ரீ நிதியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதற்கான பணம் கிடைக்கும் இல்லையென்றால் மற்ற தொகை கிடைக்கும் என்பதுதான் மத்திய அரசு தெரிவித்துள்ளனர், அதை தவிர்த்து பொய்யான பிரச்சாரத்தை திமுகவினர் செய்து வருகின்றனர் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள், ஆனால் தமிழுக்கு என்ன செய்தார்கள் இந்த திமுக திராவிடியன்கள்.
தமிழுக்காக ஒன்றும் செய்யாத அரசு என்றால் திமுக அரசுதான், ஆனால் திமுக தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறது, மொழிப்போர் தியாகிகள் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒருவருக்காவது கவுன்சிலர் சீட்டு தரவில்லை, அவர்களது குடும்பத்தினரை ஆண்டுதோறும் சந்தித்து ஏதேனும் கொடுத்துள்ளனரா என்றும் கேள்விஎழுப்பினார்.