போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
10 March 2025, 12:42 pm

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மத்திய சிறைச் சாலையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் உள்பட ஏராளமான கைதிகள் உள்ளனர். மேலும், இவர்களைத் தவிர, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில், கடந்த 2022ஆம் ஆண்டு கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த செந்தில் (38) என்பவர் போக்கோ வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவர், சிறைச் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அவரை உடனடியாக சிறைக் காவலர்கள் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து சிறை அதிகாரி லதா, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prisoner died in Coimbatore Jail

ஏற்கனவே, இந்த கோவை மத்திய சிறையில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி நெல்லையைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரேதப் பரிசோதனையில், அவரின் கழுத்து எலும்பு உடைந்து இருந்ததும், இருவருக்கும் மேல் தாக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மரணத்தை அடுத்து, சிறை அலுவலர்கள், காவலர்கள் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, சிறைக் கைதிகளுக்கு பொறுப்பான மனோரஞ்சிதம், விஜயராஜ், பாபுராஜ் மற்றும் தினேஷ் ஆகிய நால்வரும், கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவுப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் (29) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு பிரச்னையில் ராஜலிங்கம், காசிராஜன் ஆகிய இருவரைக் கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

மேலும், இவர் தனது வழக்கறிஞர்களிடம் வீடியோ காலில், ‘என்னுடன் அடைக்கப்பட்டு இருந்தவரைக் கொலை செய்து விட்டனர். அடுத்து நான்தான். எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு சிறைக் காவலர்கள் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன்ராம் ஆகியோர்தான் காரணம். எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய ரத்தினபுரியைச் சேர்ந்த செந்தில் என்ற கைதி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!
  • Leave a Reply