பழனி – வேல் இருமொழிக் கொள்கை இதுதான்.. தொடரும் பிடிஆர் அண்ணாமலை மோதல்!

Author: Hariharasudhan
13 March 2025, 12:12 pm

அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: நாடளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, மதுரை TM கோர்ட் பகுதியில், திமுக மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “அனைவருக்கும் ஒரே கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவால், தமிழ்நாடு சிறந்த முறையில் கல்வியில் சிறந்து காணப்படுக்குறது.

Annamala issues

அதைவிடுத்து, 34 அமைச்சர்கள் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் வகுப்பு சென்று படிக்கட்டும், தமிழ்நாட்டில் 8 கோடி பேருக்கு சேர்த்த கல்விதான் சிறந்தது. பாஜக பிரதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார்கள்.

இதையும் படிங்க: என்னது நாகரிகம் இல்லையா? தமிழன் நாக்கை அறுத்துவிடுவான் : அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன், அவர்கள் LKG முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழிக் கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள். இந்தியை முன்னிறுத்தி வருவதை எதிர்க்கத்தான் செய்வோம். எங்காவது ஒரு இடத்தில் மும்மொழிக் கொள்கையில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பிறகு நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ். இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?

அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Sridej health update புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!
  • Leave a Reply