சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

Author: Hariharasudhan
14 March 2025, 3:51 pm

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: 2025 – 2026ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். சுமார் 2.33 மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

இந்த நிலையில், பாஜக தரப்பில் பட்ஜெட் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” எனத் தெரிவித்துள்ளார்.

Vanathi Srinivasan

அதேபோல், பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-25ல் பட்ஜெட் மதிப்பீடுகளில், மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கான பங்கு ரூ. 49 ஆயிரத்து 755 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்திய மதிப்பீடுகளில் ரூ. 52 ஆயிரத்து 491 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி கடந்த 2024-25ம் நிதியாண்டில் அதிகரித்திருப்பதை திமுக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதை வெளிப்படையாக சொல்ல மனமில்லாமல், வழக்கம்போல மத்திய அரசு நிதியை குறைத்து விட்டது. தேசிய பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீத பங்களிக்கும், தமிழ்நாட்டிற்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே நிதி வழங்கப்படுகிறது எப்போதும் போலவே பட்ஜெட்டிலும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாநிலங்களுக்கான நிதி பங்கீடு, கடந்த திமுக அங்கும் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட அதிகமாகவே வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 15 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாடு எவ்வளவு கொடுக்கிறதோ, அதே அளவு நிதியை பெற ஏன் முயற்சிக்கவில்லை? அப்போது வலுவான மத்திய அமைச்சர் பதவிக்காக, தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்துவிட்டு இப்போது திமுகவினர் நாடகமாடி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 31-3-2026ல் 9 லட்சம் கோடியே 29 ஆயிரத்து 959 கோடியே 30 லட்சம் ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் வாங்க இருப்பதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை நோக்கி உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை.

திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் தேர்தலுக்காக சில வெற்று அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், 2021 தேர்தலின் அளித்த முக்கியமான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு, மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கீடு, பழைய ஒய்வூதியத் திட்டம், மூன்றரை லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதையும் படிங்க: முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

மொத்தத்தில் விளம்பர மோகம் கொண்ட வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்டாகவே உள்ளது. இது மக்களை ஏமாற்றும், மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனுடன் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உள்பட பல விவகாரங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் அதே நிலைப்பாட்டை அண்ணாமலையும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். எனவே, அண்ணாமலை கூறிய மறுநாள் அமலாக்கத்துறை அதையே அறிக்கையாக வெளியிடுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு உள்ளார். இதனால் திமுக – பாஜக மோதல் கடுமையாக மாறி வருகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!
  • Leave a Reply