7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி விடுதியில் அரங்கேறிய பயங்கரம்!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2025, 6:19 pm
கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி பயின்று வருகிறான்.
அந்த மாணவனுக்கு அதே விடுதியில் தங்கி உள்ள பத்தாம் வகுப்பு மாணவன் இரவு தூங்கும் நேரத்தில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்து வந்து உள்ளார்.
இதையும் படியுங்க : நாய்களுக்கு இடையே சண்டை.. சிறையில் பாஜக பிரமுகர் : காங்கேயத்தில் களேபரம்!
இதுகுறித்து மாணவன் விடுதி காப்பாளர்களிடம் தகவல் அளித்த நிலையில் தகாத செயலில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவன் ஆறாம் வகுப்பு படித்த போது இதே போல் மாணவன் பாலியல் தொந்தரவுகளை தந்ததாகவும் அப்போது விடுதி காப்பாளர்கள் மாணவனின் பெற்றோரை அழைத்து மன்னிப்பு கடிதம் வாங்கி உள்ளனர்.
ஆனால் தற்போது அதே மாணவன் மீண்டும் இந்த செயலில் ஈடுபட்டதால் ஏழாம் படிக்கும் மாணவன் அச்சத்தில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் யாரிடமும் சொல்லாமல் தனது வசிக்கும் வீட்டிற்கு சென்று உள்ளான்.
இரவு பணி முடிந்து அவனது தந்தை வீட்டிற்கு வந்த போது மகன் மட்டும் தனியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, மாணவனை கண்டித்ததுடன் எதற்காக வீட்டிற்கு வந்தாய் என கேட்டு உள்ளார்.

அப்போது மாணவன் விடுதி அறையில் தூங்கிக் கொண்டு இருந்த போது பத்தாம் வகுப்பு மாணவனால் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறியதோடு விடுதியில் தங்க பயமாக இருப்பதாகவும் கூறி உள்ளான்.
இதைத் தொடர்ந்து இன்று காலை மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளி விடுதிக்கு வந்த அவனது தந்தை விடுதி காப்பாளர்களிடம் இது குறித்து புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது இதெல்லாம் சின்ன விஷயம் எதற்காக பெரிது படுத்துகிறீர்கள் நாங்கள் அனைத்து குழந்தைகளையும் எங்களது குழந்தைகளை போல் தான் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய விடுதி காப்பாளர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து விசாரிக்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் விடுதி அறையில் சி.சி.டி.வி கேமராக்கள் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் அப்படி எல்லாம் ஒரு சம்பவம் அண்மையில் நடைபெறவில்லை எனவும் விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதே வேளையில் மாணவன், விடுதியில் தங்கி படிக்க பயமாக இருக்கிறது எனவும் பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் தனது நண்பர்களுடன் வந்து தன்னை மிரட்டுவார் அல்லது அடிப்பார் என்றும் தேர்வு வரும் வரை தினசரி வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கிறேன் என்றும் கூறினார்.
தொடர்ந்து மாணவனை பள்ளியிலேயே விட்டுச் சென்ற அவனது தந்தை பாதியில் அழைத்துச் சென்றார், கல்வி பாதிக்கும் என்பதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி காப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.