இன்னும் எதுக்கு கண்ணாமூச்சி? இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு!

Author: Hariharasudhan
26 March 2025, 11:23 am

நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் மேடையில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை: நேற்று (மார்ச் 25) காலை திடீரென அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, விமான நிலையத்தில் நீங்கள் முக்கியமான நபரைச் சந்திக்க வந்திருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதனை மறுத்த இபிஎஸ், “நான் எதற்காக டெல்லி வந்திருக்கிறேன் என்று தெரியாமல் கேட்கிறீர்களே.. நான் கட்சி ஆஃபீஸை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

பின்னர், மாலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், கே.பி.முனுசாமியும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். பின்னர், தம்பிதுரை முதலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்குச் சென்றார். அதன் பிறகு, சுமார் 8 மணியளவில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிகிறது. இவ்வாறு அமித்ஷா உடனான சந்திப்பு முடிந்து வெளியில் வந்த இபிஎஸ் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமலே சென்றார். இதனிடையே, நேற்று இரவு 10.15 மணியளவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என தமிழிலும் இந்தியிலும் குறிப்பிட்டிருந்தார். மேலும், எடப்பாடி – அமித்ஷா சந்திப்பு நடப்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், இந்தச் சந்திப்பு குறித்து கூட்டணி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.

Edappadi Palaniswami Amit Shah meeting

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். இதை அரசியல் ரீதியாக முடிச்சு போட்டு கேள்வியெழுப்பினால், அதற்கு நான் பதில் சொல்லும் நிலையில் இல்லை. எல்லோருக்கும் உள்துறை அமைச்சரைச் சந்திக்க உரிமை உண்டு. சந்திப்பிற்கு பிறகு, குறிப்பாக கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன். இப்போது பதில் சொன்னால் தவறாகிவிடும்.

இதையும் படிங்க: மீண்டும் மெல்ல உயரத் தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஆட்சியில் இருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என எல்லோரும் விரும்புகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த தேர்தல் களம் வித்தியாசமான தேர்தல் களம். இந்த முறை, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என ஐந்து முனைப்போட்டி நிலவலாம். இந்த ஐந்து முனைப் போட்டி, மூன்று முனைப் போட்டியாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?
  • Leave a Reply