பாஜகவுக்கு அனுமதி கேட்ட ஸ்டாலின்.. நொடிக்கு நொடி பேசிய வானதி.. காரசார விவாதம்!

Author: Hariharasudhan
27 March 2025, 1:56 pm

வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம், சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய விவாதத்தின்போது வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், “வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழும் நாடு இந்தியா.

பல்வேறு வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும், அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வக்ஃப் வாரிய சட்டய்ஜ் திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கிறது. அதனைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார். ஒவ்வொன்றிற்கும் பதில் பேச எனக்கு நேரம் கொடுத்தால், பதில் பேச ஏதுவாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டம் குடிமகனுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை கட்டாயம் பின்பற்றி ஆக வேண்டும்.

Vanathi Srinivasan

அரசியலமைப்புச் சட்டம் நாட்டு குடிமக்களை சமமாகப் பாவிக்கிறது. வக்ஃப் வாரியச் சட்டத்தைப் பொறுத்தவரை, திருநெல்வேலியில் கடந்த வாரம் நடைபெற்ற படுகொலையைக்கூட இங்கு விவாதித்தோம். அதுவும் இதே வக்ஃப் வாரிய பிரச்னைகளால் நடந்தது தான்”என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “வானதி சீனிவாசன் சட்டம் தெரிந்தவர். மதத்தின் அடையாளமாக கருதப்படும் வாரியத்தில் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரை புகுத்துவது எந்த வகையில் நியாயம்? வெளி மதத்தைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழைப்பது மத அரசியலைத் தூண்டுவதுபோல இருக்கும்” எனக் கூறினார்.

எனவே, மீண்டும் எழுந்த வானதி சீனிவாசன், “வக்ஃப் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் பற்றிய விவாதம் இது என்றால், இங்கு எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு கருத்திற்கும் என்னால் பதிலளிக்க முடியும். வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன” என்றார்.

இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்து பேசுகையில், “நாடு முழுவதும் பெயரளவிற்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஆட்சேபனைகளுக்கு பதில் அளிக்காமல் தேவைப்படக்கூடியவர்கள் அளித்த பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர்” எனக் கூறினார்.

உடனே, ”நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி இந்த சட்டப்பேரவை நடத்துவதற்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். எனவே, இந்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறீர்கள். அதேபோல, மத்திய அரசும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது” என வானதி சீனிவாசன் பேசினார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு எதிராக தவெக? டெல்லியால் மாறும் ரூட்!

அப்போது எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், “நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால், இந்த சட்டத் திருத்தத்தின் மீது வானதி சீனிவாசன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச சபாநாயகர் அனுமதி கொடுங்கள். இதுதான் ஜனநாயகம்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை பாஜக ஏற்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றும் கூறி வானதி சீனிவாசன் உள்பட பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரத்திற்கு கடும் விவாதம் எழுந்தது.

  • anirudh music for village subject directing by tamizharasan pachaimuthu கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!
  • Leave a Reply