பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…
Author: Prasad5 April 2025, 1:24 pm
எம்புரானுக்கு வந்த வம்புகள்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. மிக விரைவிலேயே ரூ.250 கோடி வசூலை அடைந்துவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படம் வெளிவந்தபோது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவதாக சர்ச்சைகள் கிளம்பின. இதனை தொடர்ந்து மோகன்லால் அக்காட்சிகள் எவரையும் புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதனை தொடர்ந்து திரைப்படத்தில் 24 இடங்களில் கட் செய்யப்பட்டது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயரும் மாற்றப்பட்டது.
பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்
இவ்வாறு ஒரு வழியாக “எம்புரான்” திரைப்படம் சர்ச்சையில் இருந்து மெல்ல தன்னை விலக்கிக்கொண்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை இயக்கிய நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ்ஜுக்கு வரிமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
“எம்புரான்” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகுலம் சினிமாஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து இன்று பிரித்விராஜ்ஜுக்கு வருமாவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரித்விராஜ் இதற்கு முன்பு நடித்து இணை தயாரிப்பாளராகவும் இருந்த “கடுவா”, “ஜன கண மன” “கோல்டு” போன்ற திரைப்படங்களுக்காக அவர் வாங்கிய ஊதியம் குறித்து வரிமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. “எம்புரான்” திரைப்படத்திற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.
இச்செய்தி இணையத்தில் பரவ தமிழகத்தைச் சேர்ந்த பலரும், “உண்மையை பேசினால் இதுதான் கதி. இது எதிர்பார்த்த ஒன்றுதான்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். “எம்புரான்” திரைப்படத்தில் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட இயக்கங்களுக்கு எதிரான காட்சிகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.