90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம்
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே முடியாது. 90களின் முற்பகுதியில் பிறந்தவர்களின் பதின்ம வயதுகளை ரம்மியமாக்கிய திரைப்படம் இது. கௌதம் மேனன் ஸ்டைலில் முழுக்க முழுக்க உணர்ச்சிகள் நிறைந்த திரைப்படமாகும்.

காதல், தந்தை பாசம் ஆகிய இவ்விரண்டின் அடிப்படையில் எழுதப்பட்ட கதையில் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சூர்யா பேசும் வசனங்கள் காலம் உள்ள வரை கோலிவுட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வசனங்களாக அமைந்துள்ளன. “ஒன்னு சொல்லியே ஆகணும், நீ அவ்வளவு அழகு, இங்க எவ்வளவு இவ்வளவு அழகா ஒரு, இவ்வளவு அழகை பாத்துருக்க மாட்டாங்க” என்ற வசனம் இப்போதும் பிரபலமான வசனம் ஆகும்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான பாடல்களாக அமைந்தன. இவ்வாறு கோலிவுட்டின் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த “வாரணம் ஆயிரம்” குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் கௌதம் மேனன்.
வாரணம் ஆயிரம் படத்தில் அசின்?
அதாவது முதலில் சூர்யா, அசின், டேனியல் பாலாஜி ஆகியோரை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதாக இருந்ததாம். அதில் ஒரு ரயில் காட்சியை எழுதியிருந்தாராம். ஆனால் அத்திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்த தயாரிப்பாளருக்கும் கௌதம் மேனனுக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் அந்த படத்தை இயக்க முடியவில்லையாம்.
அதன் பின் அந்த கதையில் தந்தை கதாபாத்திரம், ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ரயில் காட்சி ஆகிய உள்ளிட்ட பலவற்றை இணைத்துதான் “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை உருவாக்கினாராம் கௌதம் மேனன். இத்தகவலை அப்பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கௌதம் மேனன் “காக்க காக்க” திரைப்படத்தை தெலுங்கில் “கர்சானா” என்ற பெயரில் ரீமேக் செய்தார். அத்திரைப்படத்தில் அசின் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.