கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?
Author: Prasad15 April 2025, 4:30 pm
மேனேஜரால் வந்த வினை…
நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம் கதாநாயகன் கோலிவுட்டிற்கு கிடைத்துவிட்டார் என பலரும் அவரை திரும்பி பார்த்தனர். ஆனால் கடைசியில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனது. அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்களால் அவரது கெரியர் சரிவை கண்டது. எனினும் விடாமுயற்சியாக இப்போதும் பல படங்களில் அவர் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
“ஆய்த எழுத்து” திரைப்படத்தில் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அத்திரைப்படம் கைவிட்டுப்போனதற்கு அவரது மேனேஜர் ஒரு முக்கிய காரணம் என அவர் கொடுத்த பேட்டிகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சியிடம் ஸ்ரீகாந்தின் மேனேஜர் நடந்துகொண்ட விதம் குறித்து தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீகாந்த்.
என் கிட்ட முதலில் கதை சொல்லுங்க…
சுந்தர் சி இயக்கிய “காஃபி வித் காதல்” திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சுந்தர் சி ஸ்ரீகாந்திடம் ஒரு விஷயத்தை கூறினாராம். அதாவது “அன்பே சிவம்” திரைப்படத்திற்குப் பிறகு சுந்தர் சி ஒரு காதல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம்.
அத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க ஸ்ரீகாந்தை அணுகினாராம் சுந்தர் சி. முதலில் ஸ்ரீகாந்தின் மேனேஜரைத்தான் சுந்தர் சியால் சந்திக்க முடிந்ததாம். அப்போது அந்த மேனேஜர், “முதலில் என் கிட்ட கதை சொல்லுங்க. அது நல்லா இருந்தா நான் ஸ்ரீகாந்த் கிட்ட சொல்றேன்” என கூறினாராம்.
ஒரு மேனேஜரிடம் நான் கதை சொல்வதா? என்று கடுப்பாகி சுந்தர் சி கிளம்பிப்போய்விட்டாராம். இனி ஸ்ரீகாந்தை தன்னுடைய எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று அப்போது முடிவெடுத்தாராம். சுந்தர் சி இந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டபோதுதான் இந்த விஷயம் ஸ்ரீகாந்துக்கே தெரிய வந்ததாம். இதனை அப்பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.