பெரியப்பா பாட்டுலலாம் ஒன்னும் இல்ல? எல்லாமே பொய்- இளையராஜாவை வம்புக்கு இழுக்கும் பிரேம்ஜி?
Author: Prasad23 April 2025, 11:43 am
இழப்பீடு கேட்ட இளையராஜா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில் பல கிளாசிக் பாடல்களை பின்னணியாக ஒலிக்கவிட்டிருந்தனர். இது படம் பார்க்கும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இளையராஜாவின் “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “இளமை இதோ இதோ” போன்ற பாடல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து இளையராஜாவின் அனுமதி இல்லாமல் இப்பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா தரப்பு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தை தொடர்ந்து பலரும் இளையராஜாவை விமர்சனம் செய்து வந்தனர். எனினும் சிலர் இளையராஜா அவரது உரிமையைத்தானே கேட்கிறார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
எங்க பாட்டுக்குத்தான் கைத்தட்டுறாங்க
இந்த விவகாரம் குறித்து சமீபத்திய விழா ஒன்றில் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், “7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் போட்ட பாட்டு பிடிக்கவில்லை என்றுதானே அண்ணனுடைய பாடலை பயன்படுத்துறீங்க. எங்க பாடலுக்குத்தான் கைத்தட்டுறாங்க. எங்களாலதான் படம் ஹிட் ஆகுது. அப்போ எங்களுக்கான ஊதியம் எங்களுக்கு வேண்டும்தானே” என்று மிகவும் ஆவேசமாக பேசியது இணையத்தில் வைரல் ஆனது.
அதெல்லாம் சும்மா…
இந்த நிலையில் நேற்று “வல்லமை” என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரேம்ஜி அமரன் பேட்டியளித்தார். அப்போது கங்கை அமரன் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரேம்ஜி அமரன், “அவரது அண்ணனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து பேசுகிறார், அவ்வளவுதான். எப்படி நான் எனது அண்ணனுக்கு எதாவது ஒன்று என்றால் ஆதரவு தெரிவித்து பேசுவேனோ அதே போல்தான் இதுவும்” என பதிலளித்தார்.

அதே போல் இளையராஜாவின் பாடல்களினால்தான் அஜித் படம் ஓடியது என்று கங்கை அமரன் கூறியதை பற்றி கேட்டபோது, “அதெல்லாம் சும்மா, உண்மை என்ன என்று எல்லோருக்கும் தெரியும். தல படம் தலனாலதான் ஓடும்” என கூறியிருந்தார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
