கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2025, 2:12 pm
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து, லாஸ்பேட்டையில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!
இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 26 பேரை படுகொலை செய்தனர்.
இச்சம்பவத்தையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் புதுச்சேரி வெளிநாட்டு பதிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் பஃவ்சியா பானு, தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை கடந்த 2022-ம் ஆண்டு முதல் புதுப்பிக்காமல் உள்ளார் என தெரியவந்தது,
புதுச்சேரி வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் நேற்று லாஸ்பேட்டையில் பஃவ்சியா பானு வீட்டிற்கு சென்று, புதுச்சேரியில் இருந்து வெளியேறுமாறு கூறி, நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் அவர் புதுச்சேரியைவிட்டு வெளியேறாததால் அவர் மீது பதிவு அலுவலக அதிகாரிகள் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீசார் பஃவ்சியா பானு மீது வழக்குப் பதிவு செய்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பஃவ்சியா பானு போலீசாரிடம் தான் விசா புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
