பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை
Author: Prasad29 April 2025, 11:48 am
விஜய் டிவியில் இருந்து விலகல்
90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக் மூலம் தனது கெரியரை தொடங்கிய மணிமேகலை, அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளினியாக இருந்தவர் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
எனினும் “குக் வித் கோமாளி சீசன் 4” நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் விலக அதன் பின் தொகுப்பாளினியாக கம்பேக் கொடுத்தார். அதன் பின் “குக் வித் கோமாளி சீசன் 5” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை இறுதி வாரம் நெருங்குவதற்கு முன்பே அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
அந்நிகழ்ச்சியில் தான் விலகியதற்கு அதில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒருவர்தான் காரணம் என மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பிரியங்கா தேஷ்பாண்டேவை கைக்காட்டினார்கள்.
என் வாயாலயே வேலை வேண்டாம்னு சொல்லி…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் மணிமேகலைக்கு சிறந்த என்டெர்டெயினருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய மணிமேகலை, “என்னை தெரிந்த பலருக்கும் தெரியும். எனக்கு தொகுப்பாளினி வேலை எவ்வளவு பிடிக்கும் என்று. எனக்கு ரொம்ப பிடித்த ஒரு வேலையை என் வாயாலயே எனக்கு வேண்டாம் என்று சொல்லவேண்டிய சூழல் எனக்கு வந்தது. நான் கனவில் கூட நினைக்கவில்லை, நான் அப்படி சொல்வேன் என்று. அப்படி சொல்லிவிட்டு வந்த பிறகு நான் எவ்வளவு அழுதேன் என்று எனக்குத்தான் தெரியும்” என்று பேசியது பலரது மனதையும் நெகிழவைத்தது..
மணிமேகலை தற்போது “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.