திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2025, 1:59 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைவாழை இலையில் வாட்டர் பாட்டில் வைப்பதுபோல, பீர் பாட்டில் வைக்கப்பட்டதாக, சமூக வலைதளத்தில்விருந்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வேகமாக பரவியது.
திருக்கோவிலூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் வினோத் ஏகாம்பரம் இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, பாக முகவர்கள் கூட்டம் முடிந்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டோம்.
அதன் பிறகு கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபத்தில் சிலர் கூட்டமாக அமர்ந்து, பீர் பாட்டிலுடன் கறி விருந்து சாப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் பீர் பாட்டிலுடன் கறி விருந்து வைத்ததாக, பொய்யான செய்தி பரப்பப்பட்டுள்ளது.

இது, கண்ணியத்தோடு செயல்பட்டு வருகின்ற திமுக இளைஞரணிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த செய்தி, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர், தெளிவுபடுத்தி இருக்கிறார்.
