பாரபட்சம் காட்டாமல் எல்லா சரும பிரச்சினைக்கும் தீர்வு தரும் கற்றாழை!!!
Author: Hemalatha Ramkumar24 October 2024, 5:56 pm
இன்று பெரும்பாலானவர்களின் வீடுகளில் கற்றாழை செடி காணப்படுகிறது. சிறு சிறு முட்கள் நிறைந்த கற்றாழை நம்முடைய அழகு பராமரிப்பில் பல நன்மைகளை வழங்க வல்லது. கற்றாழை சிறந்த சரும ஹைட்ரேட்டர்களாகவும், மாய்சரைசராகவும் செயல்படுகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இது நம்முடைய சருமத்தின் தாகத்தை தணித்து, அதற்கு இளமையான பொலிவை அளிக்கிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கறைகளைப் போக்கி உங்களுக்கு இளமையான தோற்றத்தை அளிக்கிறது. பல முக்கியமான வைட்டமின்கள், என்சைங்கள் மற்றும் மினரல்கள் உட்பட கிட்டத்தட்ட 75 ஆக்டிவ் பொருட்கள் கற்றாழையில் காணப்படுகிறது. இவை அனைத்துமே நம்முடைய சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இப்போது கற்றாழையை உங்களுடைய அன்றாட சரும பராமரிப்பு வழக்கத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
ஹைட்ரேஷன் மாஸ்க்
பொதுவாக கற்றாழை ஜெல்லை ஒரு மாய்ஸ்ரைசராக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஆழமான ஹைட்ரேஷன் பெறுவதற்கு இதனை நீங்கள் ஒரு ஃபேஸ் மாஸ்காகவும் பயன்படுத்தலாம். இதற்கு சுத்தமான கற்றாழை சாற்றை முகத்தில் தடவி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம்முடைய சருமத்தில் உறிஞ்சப்படும் வரை 10 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, அதனை மென்மையாக மாற்றும். அதிலும் குறிப்பாக நீங்கள் குளிர்ந்த, வறண்ட அல்லது மோசமான சுற்றுச்சூழல் நிறைந்த ஒரு பகுதியில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு கற்றாழை ஜெல் மாஸ்க் ஒரு சிறந்த பாதுகாவலாக இருக்கும்.
வீக்கத்தை குறைக்க
கற்றாழையில் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதனை உங்களுடைய ஆன்டி-இன்ஃபிளமேட்டரி ஸ்கின்கேர் பொருளாக தாராளமாக பயன்படுத்தலாம். இது வீக்கத்தை குறைத்து, சருமத்தில் உள்ள சிவத்தலை போக்குகிறது. முகப்பரு காரணமாக ஏற்பட்ட ஏற்படும் சிவத்தலை ஆற்றுவதற்கு நீங்கள் ஃபிரெஷான கற்றாழையை பயன்படுத்தலாம். அதிலும் கற்றாழையை சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்துவிட்டு பிறகு அதனை முகத்தில் தடவும் போது உடனடியாக வீக்கம் குறைவதை உங்களால் பார்க்க முடியும்.
இதையும் படிக்கலாமே: கேன்சர் வரக்கூடாதுன்னா இன்னையோட இதெல்லாம் சாப்பிடுவத விட்டுருங்க!!!
மாய்ஸரைசர்
நாம் ஏற்கனவே கூறியது போல கற்றாழையில் மாய்சரைசிங் பண்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இயற்கையான மாய்ஸ்ரைசரை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு கற்றாழை ஒரு அற்புதமான சாய்ஸ். இது சருமத்தின் அமைப்பை மென்மையாக்கி, அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து வறண்ட சருமத்தை போக்குகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்திற்கு ஒரு மினுமினுப்பான தோற்றத்தை அளிக்கிறது.
பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறைய
அடிக்கடி உங்களுக்கு பருக்கள் ஏற்பட்டு அதனால் வந்த வடுக்கள் முகத்தில் அப்படியே இருந்தால் கற்றாழை உங்களுக்கு ஒரு அற்புதமான இயற்கை தீர்வாக அமையும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் சருமத்தை பொலிவாக்கி, சரும தொனியை சமமாக்குகிறது. மேலும் முகப்பரு வடுக்கள் மறைகிறது. அது மட்டுமல்லாமல் மேலும் புதிதாக முகப்பரு வடுக்கள் உருவாவதையும் இது தவிர்க்கிறது. கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது பருக்கள் வருவதையும் தடுக்க உதவுகிறது.
கற்றாழையுடன் வேறு எந்தெந்த பொருட்களை கலந்து பயன்படுத்தலாம்?
கற்றாழை முக்கியமாக உங்களுடைய சருமத்தை அமைதிப்படுத்தி அதனை ஆற்றுகிறது. குறிப்பிட்ட சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் இதனை வேறு சில பொருட்களுடன் பயன்படுத்தலாம். உங்களுடைய சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பதற்கு கற்றாழையை தேனுடன் பயன்படுத்தலாம். அதுவே உங்களுக்கு அடிக்கடி முகப்பருக்கள் ஏற்படுமாயின் மஞ்சளோடு கற்றாழையை கலந்து பயன்படுத்தி பாருங்கள். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சை சாற்றுடன் கற்றாழை பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு காபி பொடியுடன் கற்றாழையை கலந்து பயன்படுத்தி வர நல்ல பொலிவான சருமத்தை பெறலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.