சமீபத்தில் மொட்டை அடித்துக் கொண்டீர்களா… உங்கள் தலையை கவனித்துக் கொள்ள உதவும் சில டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar21 June 2023, 4:49 pm
கோவில் வேண்டுதல்களுக்காக ஒரு சிலர் மொட்டை அடிக்கும் பொழுது, இன்னும் சிலர் தங்களது முடியை பராமரிக்க போதுமான நேரம் இல்லாத காரணத்தால் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். ஆனால் மொட்டை அடித்துக் கொண்டால் கூட அதற்கு நாம் தகுந்த பராமரிப்பு தர வேண்டும். நீங்கள் சமீபத்தில் தான் உங்கள் தலைமுடியை மொட்டை அடித்தீர்கள் என்றால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில டிப்ஸ்களை இப்பொழுது பார்க்கலாம்.
உங்களது ஸ்கால்பை (மயிர்க்கால்கள்) சுத்தமாக வைக்கவும். நீங்கள் தலைமுடியை சுத்தமாக மொட்டை அடித்து விட்டதால் இப்பொழுது உங்கள் ஸ்கால்ப் அழுக்கு, வியர்வை மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளுக்கு வெளிப்படும். ஆகவே உங்கள் ஸ்கால்பின் ஆரோக்கியத்திற்காக மைல்டான ஷாம்பூவை பயன்படுத்தி அதனை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். இது ஸ்கால்ப்பில் எரிச்சல் ஏற்படுவதையும், பொடுகு மற்றும் பிற ஸ்கால்ப் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதையும் தவிர்க்க உதவும்.
தலைமுடி இல்லை என்ற காரணத்திற்காக அதற்கு போதுமான மாய்ஸரைசர் வழங்காமல் இருக்க முடியாது. உங்கள் மயிர்க்கால்கள் அல்லது ஸ்கால்ப்புக்கு தேவையான மாய்ஸரைசரை பயன்படுத்துங்கள். இது வறட்சி, அரிப்பு போன்றவற்றை தவிர்க்க உதவும். கற்றாழை, தேங்காய் எண்ணெய் அல்லது ஷியா வெண்ணெய் போன்ற இயற்கை பொருட்களால் ஆன மாய்ஸரைசர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
இப்பொழுது உங்கள் தலையானது உங்கள் முகத்தைப் போலவே நேரடியாக சூரிய கதிருக்கு வெளிப்படுவதால் அதற்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். உங்கள் மயிர் கால்களை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மற்றும் தொப்பி அணிவது போன்றவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.
வாரம் ஒரு முறை உங்கள் மயிர்கால்களை எக்ஸ்ஃபோலியேட் செய்வது அங்குள்ள இறந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மென்மையான பிரஷ் பயன்படுத்தி வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்வதன் மூலம் இதனை நீங்கள் செய்யலாம்.
உங்கள் தலையில் நீங்கள் பயன்படுத்தும் ஹேர் ப்ராடக்டுகளில் சல்பேட்டுகள், பாராபென்கள் மற்றும் ஆல்கஹால் போன்ற கெமிக்கல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பொருட்கள் மயிர் கால்களை வறண்டு போக செய்து எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.