மினுமினுப்பான முகத்திற்கு நலங்கு மாவு ஃபேஸ் பேக்!!!
Author: Hemalatha Ramkumar23 September 2024, 11:02 am
நலங்கு மாவு என்பது இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பாரம்பரியமான இந்திய சரும பராமரிப்பு பொருளாகும். இது சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் பளபளப்பை மேம்படுத்துவதற்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹோம்மேட் வீட்டு தயாரிப்பு பொருளில் மூலிகைகள், தானியங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் இருப்பதால் இவை சருமத்தை இயற்கையான முறையில் சுத்தம் செய்து, இறந்த சரும செல்களை அகற்றி, அவற்றுக்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. அந்த வகையில் நலங்குமாவை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் மினுமினுப்பான சருமத்தை பெற வீட்டில் செய்யக்கூடிய மூன்று பேஸ் பாக்குகளை பார்ப்போம்.
மஞ்சள் நலங்கு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து மென்மையான பேஸ்டாக குழைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய முகம் மற்றும் கழுத்து பகுதியில் சமமாக தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் முகத்தை நன்றாக காய வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவும் பொழுது பொறுமையாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை பளிச்சிட செய்து, கரும்புள்ளிகளை குறைத்து, அதற்கு இயற்கையான பொலிவை சேர்க்கிறது.
பாதாம் மற்றும் ஓட்மீல் நலங்கு ஃபேஸ் பேக்
இதற்கு 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பருப்பு பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இதனை உங்களுடைய முகத்தில் தடவி சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு பொறுமையாக வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி அதனை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
சந்தனம் மற்றும் குங்குமப்பூ நலங்கு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு நமக்கு ஒரு டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவை தேவைப்படும். இவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்து பின்னர் முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இது உங்கள் சருமத்திற்கு தேவையான போஷாக்கை அளித்து, கறைகளைப் போக்கி, இளமையான பொலிவான சருமத்தை அளிக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.