அதிக காசு கொடுத்து சருமத்திற்கு கேடு வாங்குவதற்கு பதிலா இயற்கையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஃபேஷியல ட்ரை பண்ணி பாருங்களேன்!!!
Author: Hemalatha Ramkumar17 September 2024, 3:42 pm
உங்களுடைய சரும ஆரோக்கியத்தை பராமரிக்க கெமிக்கல்கள் நிறைந்த செயற்கை ப்ராடக்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது உங்கள் சருமத்தை நீண்ட நாட்களுக்கு பொலிவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். பொதுவாக சருமத்திற்கு பழ பேஷியல் செய்வது வழக்கம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படுத்தி பேஷியல் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சர்க்கரை வள்ளிகிழங்கில் சருமத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை பொலிவடைய செய்து பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கிறது. முகப்பருவை எதிர்த்து போராடுவது முதல் வீக்கத்தை குறைப்பது வரை சர்க்கரைவள்ளி கிழங்கு சரும பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இந்த பதிவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சருமத்திற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்: சர்க்கரைவள்ளி கிழங்கில் காணப்படும் கெரட்டினாய்டு என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் வைட்டமின் A ஆக மாற்றப்பட்டு சரும செல்களை சுருக்கங்கள் மற்றும் பிற வயதான அறிகுறிகளை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அந்தோசயானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் ஏற்படும் சிவத்தல், வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளையும் போக்குகிறது.
சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைப்பதற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவில் உள்ளது. உதாரணமாக கொலாஜன் உற்பத்திக்கு அவசியமான வைட்டமின் C சர்க்கரைவள்ளி கிழங்கில் காணப்படுகிறது. இந்த கொலாஜன் சருமத்திற்கு அதன் அமைப்பு மற்றும் நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் வைட்டமின் A சத்தாக மாற்றப்பட்டு சருமத்தை தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு சன் ஸ்கிரீனுக்கு மாற்றாக அமையாது என்றாலும் கூட இது சருமத்திற்கு ஒரு கூடுதல் பாதுகாப்ப அடுக்காக திகழ்கிறது. இப்போது சர்க்கரைவள்ளி கிழங்கு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இளமையான சருமத்திற்கு:
12 துளிகள் பாதாம் எண்ணெய், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவவும். பின்னர் 2 முதல் 5 நிமிடங்கள் மேல் நோக்கி வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வாருங்கள்.
பொலிவான சருமத்திற்கு: சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து மசித்து அதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனோடு ஆறவைத்த ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.
வறண்ட சருமத்தை ஆற்ற:
1/2 சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும். இதனோடு 3 டேபிள் ஸ்பூன் பூசணி சாறு, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 10 துளிகள் பென்சாயின் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை உங்களுடைய சுத்தமான தோலில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்கவும் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி மாய்சரைசர் பயன்படுத்துங்கள்.
வயதான அறிகுறிகளை போக்க:
வேகவைத்த 1/2 சர்க்கரைவள்ளி கிழங்கை மசித்து அதனோடு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் மேப்பில் சிரப் மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி, இஞ்சி சாறு அல்லது கிராம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஈரமான ஒரு துணியில் முகத்தை துடைக்கவும்.
அதிக பணம் செலவு செய்து உங்களுடைய தோலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக குறைந்த செலவில் பக்க விளைவுகள் இல்லாத இந்த இயற்கையான காய்கறி ஃபேஷியலை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.