இந்த தீபாவளிக்கு மருதாணி கோன் போட்டுக்க போறீங்களா… அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2024, 5:55 pm

மருதாணி போட்டுக்கொள்ள எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது? கைகளில் மருதாணியை அணிந்து கொண்டு, அது சிவந்து போவதை பார்க்கும் போது பெண்களுக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி. தற்போது தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பல பெண்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தங்களுடைய கைகளில் மருதாணி போட்டுக்கொள்ள விரும்புவார்கள். முன்பெல்லாம் மருதாணி இலைகளை பறித்து அவற்றை புளி, கொட்டை பாக்கு அல்லது எலுமிச்சை சாறு வைத்து அரைத்து கைகளில் இடுவது வழக்கம். ஆனால் இன்றோ கடைகளில் மருதாணி கோன் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கி உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த மருதாணி கோன்களை பயன்படுத்துவதால் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். அவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எனவே இந்த பதிவில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மருதாணி கோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

பி-பினைல்யெனிடயாமின் (PPD) போன்ற கெமிக்கல்களால் கலப்படம் செய்யப்பட்ட கோன்களை பயன்படுத்துவது அலர்ஜியை ஏற்படுத்தும். இது கைகளில் சிவத்தல், தாங்க முடியாத அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட நேரத்திற்கு இந்த அறிகுறிகள் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும். அது மட்டும் அல்லாமல் இது மோசமான டெர்மாடிடிஸ், கண்களில் எரிச்சல் மற்றும் தொடர்ந்து கண்ணீர் வழிதல், ஆஸ்துமா, கேஸ்ட்ரிடிஸ், சிறுநீரக செயலிழப்பு, வெர்டிகோ மற்றும் கோமா போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்சிட்டிவ் சருமம் கொண்ட நபர்களுக்கு மருதாணி கோன்கள் எரிச்சலை ஏற்படுத்தலாம். நீண்ட நேரத்திற்கு கோன்களை கைகளில் வைத்திருக்கும் போது அதில் எரிச்சல், தடிப்புகள் அல்லது வறட்சி போன்றவை உருவாகலாம். இந்த மாதிரியான அறிகுறிகள் மருதாணி கோன்களை பயன்படுத்திய 1 முதல் 3 நாட்களுக்குப் பிறகு கூட ஏற்படலாம். 

மருதாணி கோன்களை பயன்படுத்திய பிறகு சூரிய ஒளிக்கு அதிக உணர்திறன் ஏற்படும் பிரச்சனையை பல பெண்கள் அனுபவிக்கின்றனர். கோன்களை கைகளில் இட்டுக்கொண்டு வெளியில் செல்லும்போது சூரியனில் இருந்து வரும் UV கதிர்கள் கைகளில் பட்டால் அது சன்பர்னை ஏற்படுத்தும். இவ்வாறு தொடர்ச்சியாக நடந்தால் அது ஆக்சிடேட் அழுத்தத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

இதையும் படிச்சு பார்க்கலாமே: மாதவிடாய் ஆரோக்கியம்: சானிட்டரி நாப்கின்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்…???

உங்களுடைய தோலில் ஏற்கனவே பிரச்சனை இருக்கும் பட்சத்தில், மருதாணி கோன்களை பயன்படுத்தினால் அது தொற்றை ஏற்படுத்தி அங்கு பாக்டீரியாக்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். எனவே உங்களுடைய தோலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மருதாணி கோன்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. 

ஒரு சிலருக்கு மருதாணி கோன்களை பயன்படுத்திய உடன் சிவப்பு, அரிப்பு, வீக்கம் நிறைந்த தடிப்புகள் ஏற்படும். இது டெர்மாடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் நம்முடைய உடல் அல்லது தோல் மருதாணி கோனில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்களுடன் வினை புரிவதால் ஏற்படுகிறது. எனவே மருதாணி கோன்களை பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை:

*மருதாணி கோன்களை கைகள் முழுவதும் இட்டுக் கொள்ளும் முன்பு பேட்ச் சோதனை செய்து பார்த்து ஏதேனும் அலர்ஜி அல்லது எரிச்சல் ஏற்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். 

*எப்பொழுதும் அதிக தரம் வாய்ந்த, பிராண்டட் மருதாணி கோன்களை பயன்படுத்துங்கள். 

*மருதாணி கோன்களை பயன்படுத்தும் முன்பு கைகளில் எந்தவிதமான எண்ணெய் அல்லது மாய்ஸ்ரைசர் லோஷன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

*மருதாணியை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கைகளில் வைத்திருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வைத்திருக்கக் கூடாது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

எனவே இந்த தீபாவளிக்கு மருதாணி போட்டுக் கொள்ளும் போது இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.!

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 509

    0

    0