ரத்தன் டாடாவுக்கு அடுத்தது யார்? காத்திருக்கும் வாரிசுகள்!

Author: Hariharasudhan
10 October 2024, 12:04 pm

இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா (Ratan Tata) காலமான நிலையில், அடுத்ததாக அவரது இடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை: சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை பலதரப்பட்ட உற்பத்தி தொழில்களை நிறுவி கொடிகட்டிப் பறந்த ரத்தன் டாடா, வயோதிகம் காரணமான மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த திங்கள்கிழமை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இது இணைய உலகை சூடாக்க, ரத்தன் டாடா காலமானார் என ஆர்பிஜி குழும தலைவர் ஹர்ஷ் கோங்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலக வணிகச் சந்தையை ஆட்டிப் பார்த்துவிட்டது.

86 வயதில் உயிர் பிரிந்த நிலையில், இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் நிலைத்து நிற்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், சினிமா பிரபலங்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, ரத்தன் டாடா கவனித்து வந்த குழுமப் பொறுப்புகளை அடுத்து யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, நிச்சயமாக டாடா குழும குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பார்சி (Parsi) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கைகளுக்குத் தான் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதில் யாருக்குச் செல்லப்போகிறது என்பதுதான் தற்போதைய வினாவாக விதைக்கப்பட்டுள்ளது.

இதற்கு விடையாக நோயல் நாவல் டாடாவின் (Noel Naval Tata) குழந்தைகளான லீ டாடா, மாயா டாடா மற்றும் நெவிலி டாடா ஆகியோர் வரிசையில் உள்ளனர். நோயல் டாடா என்பது ரத்தன் டாடாவின் உடன்பிறவா சகோதரர் ஆவார். இதில் மூத்தவரான லீ டாடா (Leah Tata), 2006ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல்ஸ் ரிசார்ட்ஸ் அண்ட் பேலசஸ் துணை விற்பனை மேலாளராக பணிக்குச் சேர்ந்தார். ஸ்பெயினில் உள்ள ஐஇ பிஸ்னஸ் ஸ்கூலில் மார்க்கெட்டிங்கில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இதையும் படிங்க: போரால் கைகூடாமல் போன காதல்.. ரத்தன் டாடா அறியாத பக்கங்கள்!

இதற்கு அடுத்தபடியாக, டாடா கேபிடலில் Analyst ஆக தனது பணியைத் தொடங்கினார் இளைய மகள் மாயா டாடா (Maya Tata). அதேநேரம், அவரது சகோதரர் நெவிலி டாடா (Neville Tata),ட்ரெண்டில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். அதேநேரம், நோயல் டாடாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரே சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் 11வது தலைவராகவும், சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் 6வது தலைவராகவும் விளங்குவார். மேலும், இவர் டாடா குழுமத்தில் 40 வருடங்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்து அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

இது மட்டுமல்லாமல், தொழில் ரீதியாகவும், டாடா அறக்கட்டளை நிறுவனங்களுக்கு அடுத்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை (Sir Dorabji Tata Trust) மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையில் பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களில் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகிய இருவரும் இந்த அறக்கட்டளைகளின் துணைத் தலைவராக இருந்தவர். அவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு முதல் டாடா அறக்கட்டளைகளில் சிறந்த பங்காற்றியவர்களாக இருந்தனர். இருப்பினும், டாடா அறக்கட்டளைகளுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக அமையப் போகிறது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 408

    0

    0