பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!
Author: Prasad9 April 2025, 12:25 pm
ஆந்திர துணை முதல்வர்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு சென்றதால் அவரது கான்வாய் செல்வதற்காக பொது மக்களின் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

தேர்வை தவற விட்ட மாணவர்கள்
பவன் கல்யாணின் கானாவாய்க்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்டுர்த்தி என்ற இடத்தில் நடக்க இருந்த பொறியியல் படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் இந்த போக்குவரத்து தடையில் சிக்கிக்கொண்டுவிட்டனர். இதனால் அம்மாணவர்கள் நுழைவுத் தேர்வு நடக்கும் மையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் கிட்டத்தட்ட 30 மாணவர்களுக்கும் மேல் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என புகார் எழுந்துள்ளது.
பெற்றோர் கண்ணீர்
தேர்வு எழுத முடியாத மாணவர் ஒருவரின் தாயார், கண்ணீர் விட்டு அழுதபடி ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்தார். பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டோம். இதனால் தேர்வு எழுத முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த செய்தி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. ஆந்திர எதிர்கட்சிகள் பவன் கல்யாணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விசாரணை நடத்துங்கள்…
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறைக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணின் கான்வாயால் போக்குவரத்து தடை ஏற்பட்டு 30 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி தமிழகத்திலும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.