மருந்து வாங்க கூட பணமில்லாமல் மரண படுக்கையில் பிரபல தயாரிப்பாளர் : ஓடி வந்து உதவிய பிரபல நடிகர்!!
Author: Udayachandran RadhaKrishnan6 March 2023, 6:31 pm
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை தற்போது உடல் நலம் குன்றிமெலிந்து தங்க இடம் இல்லாமல், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக நேற்று வீடியோ வெளியிட்டு சிலர் தெரிவித்திருந்தனர்.
பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முன்னணி நடிகர்களான, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் சில தோல்வி படங்களையும் தயாரித்துள்ளார்.
‘என்னமா கண்ணு’, ‘லூட்டி’, ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’, ‘நாய்க்குட்டி’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக இவர் தயாரிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் – சூர்யா இணைந்து நடித்திருந்த ‘பிதாமகன்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றது.
கஜேந்திரா படத்தால் தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சர்க்கரை நோய் காரணமாக இரண்டு கால்களும் புண்கள் ஏற்பட்ட பரிதாப நிலையில் இருந்த இவரை, இவரின் நண்பர் ஒருவர் தான் சாலிகிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார்.
ஏற்கனவே இது குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு தெரியப்படுத்திய நிலையில், அவரின் உதவியால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி ஏ துரை, உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு ஓரளவு உடல் நலம் தேறிய பின்னர், சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது எழுந்து உட்காரு அளவுக்கு தேறியுள்ள இவரால் நீரிழிவு நோயின் பாதிப்பின் காரணமாக கால் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு காலில் உள்ள சதை சிதைந்து, எலும்பு தெரியும் அளவிற்கு இருப்பதாகவும், எனவே இவரின் மேல் சிகிச்சைக்கு உதவி வேண்டும் என இவரின் நண்பர் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகியது.
பலருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு, பலர் உதவிக்கரம் நீட்ட முன் வந்த நிலையில், நடிகர் சூர்யா முதல் ஆளாக ஓடி வந்து அவரின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.