பல கோடி பணம்.. தொழிலதிபர்களுக்கே சவால் விடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் : பிறந்தநாளில் ஷாருக்கானின் இன்னொரு பக்கத்தையும் தெரிஞ்சுக்கோங்க!
Author: Vignesh2 November 2022, 4:00 pm
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நவம்பர் 2ஆம் தேதியான இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.1965 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஷாருக்கானுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. முதலில் டிவி சீரியல்களில் பணியாற்றி வந்த அவருக்கு தீவானா படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்துக்கு பின்னர் ஷாருக்கானின் வாழ்க்கையே மாறிவிட்டது. பாலிவுட்டில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்த ஷாருக்கானிற்கு தற்போது கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன, ஷாருக் கானின் சொகுசு வாழ்க்கை மற்றும் அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களுடன் மற்றும் அவரது சொத்துக்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சுமார் 5593 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளொன்றுக்கு அவர் ரூ.1.40 கோடி வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
ஷாருக்கான் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இதில் மட்டும் அவர் சுமார் 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் ஆகியோர் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர்களாக உள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அசோகா, சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம், மை நேம் இஸ் கான், ரா-ஒன், டான் 2, சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஷாருக்கான் நடிப்பில் தற்போது தயாராகி வரும் ஜவான் மற்றும் டுங்கி ஆகிய படங்களையும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தான் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட இரண்டு படங்களின் பட்ஜெட் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் ஆகும். இந்த இரண்டு படங்களும் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளன.
ஷாருக்கானிற்கு மும்பையில் இருந்து துபாய் வரை ஏராளமான சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் மன்னத் பங்களாவின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் ஆகும். இதுதவிர துபாயில் 24 கோடி ரூபாய் மதிப்பில் பாம் ஜுமேரா என்ற பெயரில் அவருக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. அதேபோல் லண்டனிலும் பார்க் லேன் பகுதியில் அவருக்கு சொந்தமாக ஒரு பங்களா உள்ளது. அதன் மதிப்பு ரூ.172 கோடியாம்.
ஷாருக்கான் கார் பிரியர் என்பதால் அவருக்கு சொந்தமாக ஏராளமான ஆடம்பர கார்கள் உள்ளன. அவர் அதிகம் பயன்படுத்துவது பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கார். இதன் மதிப்பு ரூ.4 கோடி. மேலும், ரூ.4.1 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், ரூ.1.3 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 6 சீரிஸ், 2 கோடி மதிப்புள்ள ஆடி ஏ6, 2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், 2.6 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார். இதுதவிர 14 கோடி மதிப்புள்ள புகாட்டி வேய்ரான் என்கிற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரும் அவரிடம் உள்ளது.
அதேபோல் ஆடம்பர வசதிகளுடன் கூடிய Volvo 9 BR எனும் வேனிட்டி வேனும் ஷாருக்கானிடம் உள்ளது. அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வேனின் விலை சுமார் 5 கோடி ரூபாய் ஆகும். இந்த வேன் சுமார் 14 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதில் படுக்கையறை, உடற்பயிற்சி செய்யும் இடம், படுக்கை அறை, பொழுதுபோக்கு அமைப்பு என ஏராளமான வசதிகள் உள்ளன.