இன்று வெளியாகிறது லியோ திரைப்படம்… விழாக்கோலம் பூண்ட தியேட்டர்கள் ; ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோள்..!!
Author: Babu Lakshmanan19 October 2023, 8:32 am
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை அடுத்தடுத்து தமிழக அரசு நிராகரித்தது. இதனால், படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ள லியோ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகியது. தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் படம் திரையிடப்பட்டு விட்டது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியாக வேண்டிய காட்சி, 10 நிமிடங்களுக்கு முன்னதாக 3.50க்கு வெளியாகியது.
நடிகர் விஜய்யின் படம் வெளியாகி இருப்பதால், அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டு, திருவிழா போல படத்தை வரவேற்கின்றனர்.
இந்த நிலையில், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- லியோ ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த நேரம் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக உள்ளது. எனது எண்ணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்க்கு நன்றி.
இந்தப் படத்திற்காக ரத்தத்தையும், வியர்வையும் உழைப்பாக செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. லியோ படத்துக்கான பணிகள் ஒரு வருடமாக மேற்கொண்டு, இரவும், பகலும் உழைத்து இதை படைத்துள்ளோம். லியோ அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடையதாக இருக்கும். ஒவ்வொரு ரசிகருக்கும் தனித்துவ அனுபவத்தை தர விரும்புவதால், படம் குறித்து ஸ்பாய்லர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்தப் படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா என்ற உங்களது அனைத்து எல்லா கேள்விகளுக்குமான பதிலை இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம், எனக் குறிப்பிட்டுள்ளார்.