மதுவுக்கு அடிமை… 3 முறை மஞ்சள் காமாலை : சாகும் நேரத்தில் பாசப் போராட்டம் நடத்திய நடிகை மஞ்சுளா.. மனம் திறந்த வனிதா!
Author: Udayachandran RadhaKrishnan1 December 2022, 1:32 pm
பிரபல சின்னத்திரை நடிகை வனிதா அவரது தாயார் மஞ்சுளாவின் இறுதி நிமிடங்கள் குறித்து பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
இரு திருமணங்கள் செய்த வனிதா இருவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார். முதல் கணவருக்கு பிறந்த மகன் ஸ்ரீஹரியை வனிதாவின் தந்தை விஜயகுமார் அழைத்துச் சென்றபோது ஏர்போர்ட்டில் வைத்து தகராறில் ஈடுபட்டார்.
இதுதான் வனிதாவின் சர்ச்சையான முகத்திற்கு அறிமுகம் கொடுத்த நிகழ்வு. அதன் பின்னர் தொடர்ந்து அவர் தனது தந்தை குடும்பத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
அந்த நிகழ்வின் போது வனிதா தனது தந்தை பற்றியும், தாய் பற்றியும், தந்தையின் மூத்த மனைவியின் மகன் அருண் விஜய் பற்றியும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அப்போது பேட்டியளித்த மஞ்சுளா, வனிதா என் மகளே கிடையாது. அவள் ராட்சசி. அவள் என் வயிற்றில் பிறந்தால் என்பதை நினைக்கும்போதே எனக்கு கேவலமாக இருக்கிறது என்றெல்லாம் காட்டமாக பேட்டியளித்து இருந்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் மஞ்சுளா இறந்த பின்பு முற்றிலுமாக வனிதா புறக்கணிக்கப்பட்டார். மஞ்சுளாவின் இறுதி சடங்கில் கூட வனிதாவை யாரும் அருகிலேயே சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்ததே. இது குறித்து தற்போது தனது பழைய நிகழ்வுகளை ஒரு பேட்டியில் வனிதா பகிர்ந்திருக்கிறார். ஷகிலா உடன் எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் வனிதா தெரியாத ரகசியங்கள் பலவற்றை போட்டு உடைத்திருக்கிறார்.
ஏர்போர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள் தன்னை வீட்டிற்கு வருமாறு மஞ்சுளா அழைக்க, வீட்டிற்கு வந்து விஜயகுமாரின் காலில் விழுந்து கதறி அழுது தான் மன்னிப்பு கேட்டதாகவும், அதன் பின்னர் ஆலப்பாக்கம் வீட்டில் மாடியில் மஞ்சுளா வசித்து வந்ததாகவும், அதே வீட்டில் கீழ் தளத்தில் தானும் மகன் ஸ்ரீஹரி, மகள்கள் ஜோவிதா, ஜெயனிதா ஆகியோருடன் வசித்து வந்ததாகவும் கூறினார்.
தனது தாயார் மஞ்சுளாவிற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்ததாகவும், தன்னை பற்றி அவர் பேட்டியளிக்கும் போது அதிக குடிபோதையில் இருந்ததை இந்த உலகமே பார்த்ததாகவும் வனிதா கூறினார்.
தனது தாயாரை ஏமாற்றி தன்னை பற்றி அவ்வாறு அவதூறு பேச வைத்தனர் என்றும், இறுதியாக தன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை மிக மோசமானதாகவும், 72 மணி நேரத்தில் அவர் இறந்து விடுவார் என்ற சூழ்நிலையில் அவர் தன்னிடம் சில விஷயங்களை சொன்னதாகவும் வனிதா கூறினார்.
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து பத்திரங்களிலும் உன் பெயரை சேர்க்க வேண்டும் என்றும், என்னை ஒரு வீடியோவாக எடு, நான் சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்று மஞ்சுளா கூறியதாகவும், ஆனால் தற்போது இந்த வீடியோ எடுத்தால் தனக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்று சொல்லி தான் அதை மறுத்து விட்டதாகவும், தன் தந்தை விஜயகுமாரிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று கடைசியாக மஞ்சுளா கூறியதாகவும் வனிதா பேசினார்.
பின்னர் தனது தாயார் இறந்த பிறகு இறுதிச் சடங்கை செய்யக்கூட தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது சரத்குமாரும் ராதாரவியும் தான் என்னை முன்னால் அழைத்து இறுதிச்சடங்குகளை செய்ய வைத்தனர்.
அவர்கள் இல்லை என்றால் என் தாயாருக்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்து வைத்திருக்க முடியாது. தற்போது இந்த வீட்டை தனது தாயார் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவிக்கு எழுதி வைத்து விட்டதாக கூறுகின்றனர். எனக்கு இந்த சொத்தில் உரிமை இல்லை என தாயார் மஞ்சுளா எழுதி வைத்து விட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை, என் தாயாரின் கையெழுத்தை மாற்றி இவர்கள் போலி பத்திரம் செய்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.
அதை என்னால் நிரூபிக்க கூட முடியும், ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. பிரீத்தாவும் ஸ்ரீதேவியும் எனது தங்கைகள் தான். நான் அந்த சொத்தில் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள், அந்த சொத்து பிரிக்கப்பட்டால் அது என் பெண் பிள்ளைகள் இருவருக்கும் சென்று சேர வேண்டும், அது மட்டுமே என்னுடைய விருப்பம் என்று அவர் நெகிழ்ந்து போய் பேசினார்.