“இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?
Author: Prasad15 April 2025, 2:12 pm
இது ரசிகர்களுக்கான படம்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம் பார்த்த வெகுஜன ரசிகர்கள் பலரும் “படம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் போல் இருக்கிறது. கதையே இல்லை” என கூறி விமர்சித்து வந்தனர். ஆனால் ஒரு பக்கம் “இது அஜித் ரசிகர்களுக்கான திரைப்படம். வேறு எதையும் எதிர்பார்த்து படத்திற்கு போகவேண்டாம்” என்று அஜித் ரசிகர்கள் பதிலளித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா, தனது பாடல்களை அனுமதி இன்றி “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பயன்படுத்தியதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்…
இந்த நிலையில் இளையராஜா நோட்டீஸ் கொடுத்த செய்தியை பகிர்ந்த செய்தி நிறுவனங்களின் கம்மெண்ட் பக்கங்களில் அஜித் ரசிகர்கள் பலரும் இளையராஜாவை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர். “பெருந்தன்மையற்ற இளையராஜா”, “பணப் பைத்தியம் இளையராஜா” என்று அஜித் ரசிகர்கள் பலரும் இளையராஜாவை கடுமையாக திட்டி வருகின்றனர்.
அதற்கு பலரும் பதிலடி கொடுக்கும் வகையில், “இளையராஜா சொந்தமாக இசையமைத்த பாடல்கள் அது. அவர் இழப்பீடு கேட்பது அவரது உரிமை” என பதிலளித்து வருகின்றனர்.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து “ஒத்த ரூபா தாரேன்”, “இளமை இதோ இதோ”, “என் ஜோடி மஞ்சக்குருவி” போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.