அமர்க்களம் படத்தில் வந்த தியேட்டரை ஞாபகம் இருக்கா? முடிவுக்கு வந்தது 55 ஆண்டு கால சகாப்தம்!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2024, 11:51 am
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசா தியேட்டரை 90களில் தமிழ்நாட்டில் வளர்ந்தவர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள்.
அஜித் நடித்த “அமர்க்களம்” படத்தில் இடம்பெற்ற ராகவா லாரன்ஸ் நடனமாடிய “காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா” பாடல் காட்சி இத்திரையரங்கத்தில் படமாக்கப்பட்டது. இது அப்போதிருந்து மிகுந்த பிரபலத்தைக் கண்டது.
கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்த இந்தத் தியேட்டர் தற்போது இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக மாற்றப்படவுள்ளது.
எளிய மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகவும் சுலபமான இடமாக இருந்த இந்த தியேட்டரில் டிக்கெட் விலையென்றால் அதிகபட்சம் 20 ரூபாயே! 6 ரூபாயில் கூட படம் பார்க்க முடிந்தது. 2018 வரை இந்த விலையே நிலவியது.
திரையரங்கின் உரிமையாளர் தேவநாதன் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் போன்ற முன்னணி தலைவர்களுக்கு ஆலோசகராக இருந்தவர். 1963ல் எம்.ஜி.ஆர் நடித்த “பரிசு” படமே இத்திரையரங்கில் தீபாவளி வெளியீடாக திரையிடப்பட்ட முதல் படம்.
அதன் பின் “என் கடமை”, “நான் ஆணையிட்டால்” போன்ற படங்களும் தொடர்ந்து இங்கே ஓடின. மேலும், பொங்கல் மற்றும் தீபாவளி வெளியீடுகளில் சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கே திரையிடப்பட்டு, பல படங்கள் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்தன. குறிப்பாக “வைதேகி காத்திருந்தாள்” படம் இங்கே 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்க: கல்யாணக் கலைனு சொல்லுவாங்களே.. அது இதுதானா? கீர்த்தி சுரேஷ் Gorgeous Photos!
1970கள் வரை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்த இந்த தியேட்டர், அதன் காலத்தில் அவற்றின் சொர்க்க பூமியாக கருதப்பட்டது.
இங்கு திரையிடப்பட்ட கடைசி படம் விஜயின் “சர்க்கார்”. அதன்பின் திரையரங்கிற்கு போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால் மூடப்பட்டு, கொரோனாவுக்கு பின்னர் மேலும் நஷ்டம் அடைந்ததால், நிர்வாகம் அதை இடித்து மாற்ற தீர்மானித்தது.