தாய் மொழி மீது ‘அதீத காதல்’… உலக தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்..!
Author: Vignesh6 January 2023, 8:00 pm
இன்று தனது 56-வது பிறந்தநாளை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடி வருகிறார். பொதுவாகவே, ஏ.ஆர்.ஆர்-க்கு தமிழ்நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் அதீத காதல் என்றே சொல்லலாம். காரணம் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், எனது அம்மாவை நான் மதர் என அழைப்பதில்லை என்றும், அம்மா என்று தான் அழைப்பேன் என மிகவும் கர்வமாக தெரிவித்தார்.

அதேபோல் ஆஸ்கர் விருதுவழங்கும் மேடையில், அனைத்து வெளிநாட்டு பிரபலங்கள் முன்னிலையில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் முழக்கமிட்டார். மேலும், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பிரச்னை நிலவியபோது, தமிழன்னை ‘ழ’ எனும் வேலை கையில் ஏந்தியபடி இருக்கும் தமிழணங்கு எனும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மொழிப்பற்றை ஏ.ஆர்.ரஹ்மான் நிரூபித்தார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளான இன்று ஏ.ஆர்.ரஹ்மான், “கற்றார்” எனும் புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்துள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் பிளாட்ஃபார்ம் ஆகும்.

இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.
தனது தமிழ்ப்பற்றை விளக்கும் விதமாக கற்றார் எனும் தமிழ் பெயரையே சர்வதேச டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கு வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் அசத்தியுள்ளார்.