தற்கொலை முயற்சி செய்த நபர்… 48 மணி நேரம் ஏஆர் ரஹ்மானின் அந்த பாடலை கேட்டு உயிர் பிழைத்த சம்பவம்!
Author: Shree8 July 2023, 11:39 am
சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
ஏஆர் ரஹ்மானின் இசைக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் உள்ளனர். எப்பேற்பட்ட மனநிலையில் இருந்தாலும் ஏஆர் ரஹ்மானின் பாடலை கேட்டால் ஒரு வித புத்துணர்ச்சி ஏற்படும், இந்நிலையில் அப்படித்தான் தற்கொலைக்கு முயற்சி செய்த நபர் ஏ ஆர் ரகுமானால் மனம் மாறி இருக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, மலேசியாவை சேர்ந்த செல்வகுமார் என்ற இசை கலைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இரவு நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன். அப்போது என்னுடைய நண்பரிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அவர், ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற” நானே வருகிறேன்” பாடலை எனக்கு அனுப்பி இருந்தார். அதனை கேட்ட பிறகு என்னுடைய மனம் எப்படி மாறியது என்று எனக்கு தெரியவில்லை.
அந்த எண்ணத்தில் இருந்து மாறிய நான் வீட்டிற்கு சென்று என்னுடைய அறையை பூட்டிக்கொண்டு ஹெட் போன் மூலம் கிட்டத்தட்ட 48 மணி நேரம் திரும்பத் திரும்ப அந்த பாடலை கேட்டுக்கொண்டே இருந்தேன். அதன் பின் நான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. அன்று தான் நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது, விட்டுக் கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்பானது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன் என கூறி ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஏஆர் ரஹ்மான், “எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன் என்று ரிப்ளை செய்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வெளியாகி மீண்டும் ஒருமுறை எல்லோரும் அந்த ” நானே வருகிறேன்” பாடலை கேட்டு வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்🌺 https://t.co/wrrsRwDYAl
— A.R.Rahman (@arrahman) July 6, 2023