மறைமுகமாக இந்தியை எதிர்க்கிறாரா விஜய்..? சர்ச்சையை கிளப்பிய பீஸ்ட் வசனம்… !!
Author: Babu Lakshmanan13 April 2022, 11:25 am
உலகம் முழுவதும் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பியதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் நடித்த இந்த படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
திரையரங்குகளில் நள்ளிரவு முதல் குவிந்த விஜய் ரசிகர்களின் பட்டாளம், சிறிய பேனர் வைத்து, மாலைகள் இட்டு,பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ஆரவாரமாக கொண்டாடினர். இந்த உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஏ ராளமானோர் பங்கேற்று திரைப்படத்தை வரவேற்றனர்.தொடர்ந்து காலை 4 மணி அளவில் குழந்தைகள், குடும்பத்தினர், இளைஞர்கள் என திரண்டு படம் பார்க்க வந்திருந்தனர்.
படம் குறித்து பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில், இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகள் பற்றியும் கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இப்படியிருக்கையில், பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து வசனம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தில் உள்ள காட்சி ஒன்றில் “உங்களுக்கு மொழிமாற்றம் செய்ய, தான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது எனவும், தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்” என்றும் நடிகர் விஜய் பேசுவதாக வசனம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து சர்ச்சையாகி, அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த வசனத்தின் மூலம் நடிகர் விஜய்யும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே, சர்க்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை வசனத்தால் அதிமுகவும், மெர்சல் படத்தில் மருத்துவம் பற்றி சர்ச்சை வசனத்தால் பாஜகவின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் நடிகர் விஜய். மேலும், இந்த எதிர்ப்புகளினால், அந்தப்படங்களும் சக்கை போடு போட்டன.
இந்த நிலையில், பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இந்தி விவகாரத்தை வைத்து சர்ச்சையை உருவாக்கி, அதன்மூலம் ஆயத்தம் தேட முயற்சிக்கின்றனரா..? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
பட ஆடியோ விழாக்களில் குட்டி கதை சொல்லி அரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு, விரைவில் பாஜகவின் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது.