பிக்பாஸ் பிரபலத்தின் மனைவியை தேடும் போலீஸ்… பெரிய குடும்பத்தில் இருந்து கொண்டு செய்த தில்லாலங்கடி வேலை…!!
Author: Babu Lakshmanan28 March 2023, 10:22 am
சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் மஞ்சு. இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருவதால், திரையுலகின் பிரபலங்களுடன் சற்று தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், பிக்பாஸ் பிரபலமும், ஜெமினி கணேசனின் பேரனுமான அபிநயின் மனைவி அபர்ணாவுடனும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அபர்ணா நடத்தி வரும் துணிக்கடைகளுக்கும் மஞ்சு ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வந்துள்ளார். இதன்மூலம், இருவருக்கிடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்படியிருக்கையில், கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் 12ம் வகுப்பு முடித்து விட்டு, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்காத நிலையில், என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்துள்ளார். அப்போது, இதையறிந்த அபர்ணா, சம்பந்தப்பட்ட அந்தக் கல்லூரியில் தனக்கு தெரிந்தவர் இருப்பதாகவும், 20 லட்சம் கொடுத்தால் மருத்துவக் கல்லூரியில் இடம் வொங்கிவிடலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தை கொடுத்து மருத்து சீட்டை புக் செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பிறகு செலுத்திக் கொள்ளலாம் என்று அபர்ணா தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய மஞ்சுவும், அபர்ணா கொடுத்த அஜய் என்பவரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து, 5 நாட்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக வாட்ஸ்அப்பில் சான்றிதழ் ஒன்றை அபர்ணா, மஞ்சுவிற்கு அனுப்பியுள்ளார். அந்த சான்றிதழை எடுத்துக் கொண்டு, கல்லூரிக்கு சென்று கேட்ட போது, அது போலியான சான்றிதழ் என்று கல்லூ நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஞ்சு, உடனடியாக அபர்ணாவை துணிக்கடைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால், பணத்தை தனது நண்பரிடம் கொடுத்ததால், அவரிம் சென்று கேட்குமாறு கூறி அலைக்கழித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது துணிக்கடையை மூடிவிட்டு அபர்ணா தலைமறைவாகியுள்ளார். பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது தலைமறைவாக இருக்கும் அபர்ணாவை தேடி வரும் போலீசார், இதுபோன்று வேறு நபர்களிடமும் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளாரா..? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.