Bigg Boss 6 Tamil Episode 10: ஆச்சரியம் தந்த விக்ரமன் – பல்பு வாங்கிய அசிம்.. ‘தலைவரே.. இப்படி இருக்கலாமா?’ முத்துவிற்கு அட்வைஸ் தந்த பிக்பாஸ்..!
Author: Vignesh20 அக்டோபர் 2022, 3:15 மணி
‘நாலே நாளில் ஜெட் வேகத்தில் ஷோ போய்க் கொண்டிருக்கிறது’ என்று இந்த சீசன் பற்றி கமல் பெருமைப்பட்டார். ஆனால் அதில் யாரோ கலப்பட பெட்ரோலை கலந்து விட்டார்களோ, என்னமோ. நேற்றைய எபிசோட் படு மந்தமாக இருந்தது. இந்த ஸ்பீட் பிரேக்கருக்கு ‘கதை சொல்லும் நேரம்’ ஒரு காரணமாக இருக்கலாம். அடிக்கடி சுவாரஸ்யமான டாஸ்க்குகளைத் தருவதின் மூலம் மீண்டும் பழைய வேகத்தை அடைய பிக் பாஸ் டீம் முயற்சிக்கலாம்.
இது ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொன்றைக் கவனித்தீர்களா? ஆரம்ப நாளில், ஒரு சிலரைத் தவிர மற்ற போட்டியாளர்களைப் பற்றி நமக்கு அறிமுகமே இல்லை. அவர்கள் யாரென்றே தெரியவில்லை. ஆனால் இந்த பத்து நாட்களில் ஒவ்வொருவரின் முகம், பெயர், குணாதிசயம், ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட் போன்றவை நமக்குப் பிடிபட ஆரம்பித்திருக்கின்றன. ‘அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள்’ என்பதைக் கூட யூகிக்கும் அளவிற்கு நாம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம்.
ஆனால் பிறந்தது முதல் இத்தனை வருடங்களாக நம்முடன் இணைந்து வாழும் ‘நம்மைப்’ பற்றி நமக்கு எத்தனை தூரம் தெரியும்? பிக் பாஸ் போட்டியாளர்களைக் கவனித்தது போல ‘நம்மைப்’ பற்றி நாமே எத்தனை தூரம் கவனித்திருக்கிறோம்? யோசிக்கலாம். (தத்துவம் சொல்றாராமாம்!).
நாள் 10-ல் நடந்தது என்ன?
‘வேக்அப் சாங்கிற்கு பழைய பாடல்களாகப் போடுகிறார்களே’ என்று நேற்று சொன்னது பிக் பாஸ் டீம் காதில் விழுந்து விட்டது போல. ‘பத்தல. பத்தல’ என்று சமீபத்திய படத்திலிருந்து அலற விட்டார்கள். ஆனால் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் பார்க்கிறவர்களுக்கு, இந்தப் பாடல் கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பிரேக்கிலும் நாலைந்து முறை அலற விட்டு ராவடி செய்கிறார்கள்.
‘என் மேல ஆரம்பத்துலயே நெகட்டிவ் முத்திரை முத்திட்டாங்க. மத்தவங்க குறை சொல்லி விளையாடறது எனக்குப் பிடிக்கலை. மண்டை வலிக்குது’ என்று அமுதவாணனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் க்வின்சி. `இது கேம். அப்படித்தான் இருக்கும். பாத்து விளையாடு’ என்றார் அமுது.
ஆச்சரியம் தந்த விக்ரமன் – பல்பு வாங்கிய அசிம்
‘மாரி’ பாடலுக்கு கதிரவனும் விக்ரமனும் ஆட ஆரம்பித்தார்கள். இந்த டிவிஸ்ட்டை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியம்தான். பார்க்க சாதுவாக இருந்த விக்ரமன், கொலைவெறி உக்கிரத்துடன் இறங்கி குத்தி ரகளையாக ஆடினார். கதிரவனும் இதற்கு தாக்குப் பிடித்தார் என்றாலும் விக்ரமனின் ஆவேசத்திற்கு முன்பு குறைவுதான். எனவே விக்ரமன் வெற்றி. “பார்றா..” என்று ஏடிகே புறணி பேச “விக்ரமன் வெற்றிக்கு தகுதியானவர்தான்’ என்று பெருந்தன்மையாகச் சொன்னார் கதிரவன். (கதிர் ஓவர் நல்லவரா தெரியறது.. உண்மையா.. அல்லது.. ஆனால் சைலண்ட்டாக நிறைய ஸ்கோர் செய்து வருகிறார்).
“நம்ம ரெண்டு பேரும் பொதுமக்கள் கேட்டகிரில இருந்து வந்திருக்கறதால, சீக்கிரம் வெளியே அனுப்பிடுவாங்கன்னு தோணுது” என்று ஷிவினிடம் அநாவசியமாக பயந்து கொண்டிருந்தார் தனலஷ்மி. (ஆமாம். ஜி.பி.முத்து ரசிகர்கள் கொலைவெறில இருக்காங்க!). “நீ சரியான காரணத்திற்காக சண்டை போட்டிருந்தா இந்தப் பயம் தேவையில்லை” என்று சரியான முறையில் ஆறுதல் சொன்னார் ஷிவின்.
‘முணுக்’ என்றால் மூலையில் உட்கார்ந்து மூக்கைச் சிந்துகிறவர்களைப் பார்த்தால் சற்று எரிச்சல்தான் வருகிறது. ஷெரினா இப்படியொரு காரியத்தை இன்று செய்தார். அவர் வயிற்று வலியால் படுத்து விட “உண்மையான வயிற்று வலியா.. இல்லைன்னா டான்ஸ் ஆடணுன்னு பயத்துல வந்த வலியா?” என்று ராபர்ட் விளையாட்டாகக் கேட்டு விட, அமைதியாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார் ஷெரினா. மாறாக ராபர்ட்டை தனியாக அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம். பிறகு ராபர்ட் வந்து ‘எனக்கு கூட வயித்து வலியா இருந்தது. அதுக்குத்தான் கேட்டேன்’ என்று சொல்லி சிரிக்க வைத்தவுடன்தான் ஷெரினா சமாதானம் ஆனார்.
இந்தச் சமயத்தில் அசிம் தேவையில்லாமல் பங்கப்பட்டது ஒரு ரணகள காமெடி. “ஆக்சுவலி… ஷெரினாவிற்கு ஃ.பீவர் இருக்கு… மெடிக்கல் உதவி வேணும்” என்று காமிரா முன்பு செய்தியாளர்போல அவர் சீரியசாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். ‘மத்தவங்களுக்காக பேசறது நல்ல விஷயம். ஆனா மைக்கை மாட்டிக்கிட்டு பேசுங்க தம்பி. அப்பத்தானே எனக்கு கேட்கும்?” என்று பிக் பாஸ் பெரிய பல்பாக கொடுக்க அசடு வழிந்தார் அசிம்.
‘தலைவரே.. இப்படி இருக்கலாமா?’ முத்துவிற்கு அட்வைஸ் தந்த பிக் பாஸ்
‘கதை சொல்லும் நேரம்’ டாஸ்க் ஆரம்பிக்க, அனைவரும் சபையில் கூடினார்கள். முத்து மட்டும் பவுடர் பூசுவதில் பிஸியாக இருக்க, ‘வாங்க தலைவரே.. டயமாச்சு’ என்று மற்றவர்கள் அலற, ஓடி வந்தார் முத்து. மைனா பேச ஆரம்பித்தார். தான் கடந்து வந்த சிரமங்களைப் பற்றி இவர் விவரிக்கும் போது “நம்மைத் திட்டறவங்களே அவங்க வேலையைச் சரியாச் செய்யும் போது, நாம நம்ம ரூட்ல போறதை இன்னமும் சரியாச் செஞ்சிட்டு போய்ட்டே இருக்கணும்” என்று சொன்ன பாயின்ட் சிறப்பு. விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இரண்டு பேர் மட்டும் பஸ்ஸர் அடித்ததால், மைனா வெற்றி.
முத்துவை அழைத்த பிக் பாஸ் “இங்க நிறைய விதிமீறல் நடக்குது. தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்புல இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருக்கலாமா? தலைவர்னாலே இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பாங்க’ன்னு மக்கள் நெனக்கறாங்க… பிக் பாஸ் வீட்லயும் அப்படி நடக்கலாமா? இனிமே இங்க தப்பு செய்யறவங்களுக்கு தண்டனை கொடுங்க. நீங்களும் முன்னுதாரணமாக இருங்க” என்று அறிவுறுத்த, தாள் பணிந்து கேட்டுக் கொண்டார் முத்து.
இன்று பிக் பாஸ் வீட்டு காமிராக்களில் ஒன்று ஷார்ட் ஆகி வெடித்து சிதறியிருக்கலாம். ஆம், காமிராவிற்கே க்ளோசப் வைத்து அதற்கு நெருக்கமாகச் சென்று தன் முகத்தைக் காட்டி ‘அலர்ட்டா இருக்கியான்னு பார்த்தேன்’ என்று மைனா செய்த விபரீத காமெடியால் பல குழந்தைகள் அலறி பயந்திருப்பார்கள்.
‘கதை சொல்லும் டாஸ்க்கை சரியாக விளையாடும் விக்ரமன்’
“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கை விட மாட்டான்.. எங்க அம்மா இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.. பொறந்தவன், வாழறவன்… இவங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம் இருந்துட்டுதான் இருக்கும்..’ என்றெல்லாம் புன்னகையுடன் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் கதிரவன். வழக்கம் போல் விக்ரமன் கொலைவெறியுடன் பாய்ந்து வந்து பஸ்ஸர் அடித்தார். கூடவே சாந்தியும். இரண்டு பஸ்ஸர் மட்டுமே என்பதால் கதிரவன் வெற்றி. “உங்க கதையைச் சொல்லிட்டு வாங்கன்னா. மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கறீங்களே.. புரொபசர்” என்று கதிரவனைக் கலாய்த்தார் மைனா.
“பஸ்ஸர் அடிக்காதவங்களுக்கு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா?” என்று இந்தச் சமயத்தில் விக்ரமன் கேட்டது சரியான கேள்வி. அவர் மட்டுமே ‘கதை சொல்லும் நேரம்’ விளையாட்டில் சரியாக செயல்படுகிறார். ‘எதற்கு வம்பு?’ என்று பலர் சேஃப் கேம் ஆடுவது போல் தெரிகிறது. ‘எட்டு பேருக்கு மட்டுமே ஃப்ரீ ஸோன் வாய்ப்பு’ என்பதால் சலிப்பூட்டும் கதைச் சொல்லிகளைத் தடுத்தால்தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். டோக்கன் நெம்பர் 17-ஐ வைத்துள்ள காரணத்தினால் விக்ரமன் துடிப்பாகச் செயல்படுவது நல்ல ஆட்டம். “மத்தவங்களுக்கு தோணினா. அடிக்கப் போறாங்க” என்று இதற்கான எதிர்வினை வந்தது.
அடுத்ததாகக் கதை சொல்ல வந்தவர் மகேஸ்வரி. இவர் உருக்கமாக ஆரம்பித்த அடுத்த கணமே கொலைவெறியுடன் பஸ்ஸர் நோக்கி பாய்ந்து வந்தார் அசிம். பின்னால் அசல் மற்றும் மைனா. எனவே மகேஸ்வரி கதையை நிறுத்தி வெளியேற வேண்டியிருந்தது. அடுத்து வந்தவர் ஷிவின். ஒரு மாற்றுப் பாலினத்தவராக தான் பட்ட சிரமங்களை ஷிவின் சொல்லும் போது யாருக்கும் தடுக்கத் தோன்றவில்லை. அசல் மட்டுமே பஸ்ஸர் அடித்தார். எனவே ஷிவின் இந்த டாஸ்க்கில் வெற்றி.
‘அசல் கோளாறு – அசலாகவே கோளாறு பிடித்தவரா?’
‘தாரை தப்பட்டை’ படத்தில் வந்த ஒரு ரகளையான பாடலுக்கு அமுதவாணனும் நிவாவும் ஆட ஆரம்பித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது, ஒரு புரொஃபஷனல் டான்ஸரின் நேர்த்தியோடு ஆடினார் அமுதவாணன். நிவாவின் பங்களிப்பையும் குறை சொல்ல முடியாது என்றாலும் அமுதுவிற்கு கிடைத்த வெற்றி நியாயமானது. ‘எவ்ள பயந்த. பாரு சூப்பரா ஆடிட்ட’ என்று நிவாவிற்கு ஊக்கம் தந்து கொண்டிருந்தார் ஷெரினா.
அசல் ‘கோளாறாக’ செய்யும் சில விஷயங்கள் அவருக்கே ஆப்பாக அமையலாம். அவர் தவறாக புரிந்து கொள்ளப்படுவதற்கான சாத்தியங்களை அவரே உருவாக்குகிறார் என்று தோன்றுகிறது. நிவாவிடம் சென்ற அசல், “அமுதவாணன் டான்ஸ்தான் எனக்கு உண்மையில பிடிச்சது. அவருக்குத்தான் போர்டு தூக்கினேன்.. என்னால செயற்கையா பாராட்ட முடியாது’ என்றெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்க “சரி.. என்ன இப்ப அதுக்கு?” என்று வியந்தார் நிவா. “நான் சொல்றது புரியுதா?” என்று அசல் மறுபடியும் மணிரத்னம் படத்தில் வருவது மாதிரி ரகசியம் பேச, நமக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நான் எவ்வளவு நல்லவன் பார்த்தியா?’ என்பது மாதிரி காட்டி நிவாவை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறாரா?
அடுத்ததாக அமுதவாணன் கதை சொல்ல வந்தார். யாருமே அவரைத் தடுக்கவில்லை. ‘நான் நடிச்சது பாலாவோட ஒரு படத்துல மட்டும்தான்’ என்று ஆதங்கத்துடன் சொன்னார்.. திறமைசாலியாக இருக்கிற அமுதவாணனுக்கு ஏன் தொடர்ந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை?!
‘தலைவரே.. தலைவரே.. வேணாம் தலைவரே…’
‘ஹோம் சிக்’ காரணமாக மன அவஸ்தை கொள்ளத் தொடங்கி விட்டார் முத்து. ‘என் பிள்ளை என்னைத் தேடுவான். நான் வெளில போறேன். நீங்க பஸ்ஸர் அடிங்க’ என்றெல்லாம் அனத்தத் துவங்கி விட்டார். அவரை கன்பெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் “நீங்க இல்லைன்னா காமெடி கன்டென்ட்டிற்கு நாங்க என்ன செய்வோம்?” என்று உள்ளபடி கேட்காமல் “வீட்ல எல்லோரும் நல்லாயிருக்காங்க.. நல்லா விளையாடிட்டு வர்றீங்க. இது பெரிய வாய்ப்பு. உலகம் முழுக்க பார்ப்பாங்க” என்று உசுப்பேற்றி விட தற்காலிகமாக சமாதானம் ஆனார் முத்து.
ஆயிஷாவிற்கும் க்வின்சிக்கும் இடையில் நடனப் போட்டி. பார்க்க சாதுவாக இருந்து கொண்டு, விக்ரமனைப் போலவே க்வின்சியும் ஆடி அசத்தினார். இவர் ஆவேசமாக குத்தி ஆடியதில் மேடைக்கு நிறைய வலித்திருக்கும். க்வின்சிக்கு இதில் வெற்றி கிடைத்தது.
மறுபடியும் நிவாவிடம் சென்று முணுமுணுக்க ஆரம்பித்தார் அசல். “நான் உண்மையைச் சொன்னேன்.. நீ பதிலுக்கு எதுவுமே சொல்லலையே” என்று இவர் கேட்க “என்னடா. உன் பிரச்சினை.. ஆனா ஒரு வார்த்தையாவது என் டான்ஸைப் பாராட்டியிருக்கலாமே?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் நிவா. சப்டைட்டில் போடாமல் இவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறது.
“என்னாச்சு. ரெண்டு பேரும் சமாதானம் ஆயிட்டிங்களா?” என்று பிறகு நிவாவின் வாயைப் பிடுங்க முயன்றார் ஆயிஷா. “ஹே.. அவன் பிரெண்டுதான்..” என்று ஆயிஷாவின் கிண்டலை பாதியில் முறித்தார் நிவா. “அவன் என்னை அக்கான்னு ஏத்துக்க மாட்டானாம்” என்கிற புகாரோடு அங்கு வந்தார் க்வின்சி. “சரியான கோளாறு பிடிச்ச பயலா இருக்கான்” என்று மூன்று பெண்களும் கிளுகிளுவென்று சிரித்துக் கொண்டார்கள்.
‘கதை சொல்லும் நேரத்தின் போது பஸ்ஸர் அடிப்பதில் உள்ள டெக்னிக்கை மகேஸ்வரி சரியாக விளக்கிக் கொண்டிருந்தார். “அமுதவாணன்… கதிரவன் ..போன்ற ஆளுங்கள்லாம் நிச்சயம் நாமினேட் ஆக மாட்டாங்க. அவங்களுக்கு பஸ்ஸர் அடிக்கறது வேஸ்ட்” என்று மகேஸ்வரி சொன்ன விளக்கத்தை வழிமொழிந்து “ஆமாம். யாரு ரிஸ்க்ல இருக்காங்களோ.. அவங்களுக்குத்தான் ஃப்ரீஸோன் வாய்ப்பு யூஸ் ஆகும்” என்றார் விக்ரமன்.
0
0