Bigg Boss 6 Tamil Episode 5: மகேஸ்வரிக்கு எதிராக சாந்தி – அரசியல் ஆரம்பம்..!ரட்சிதாவை ரவுண்டு கட்டும் ராபர்ட்.. இன்னும் ட்ரெய்னிங் வேணும்..!
Author: Vignesh15 October 2022, 2:00 pm
- “போட்டியாளர்களை ஒரே வயசுல போடறதுக்கு இது ரீல்ஸ் கிடையாது” என்று ஜனனி சொன்னதும் சர்ச்சையானது. தனலக்ஷ்மியின் சார்பாக ஆஜராகி ஜனனியிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார் விக்ரமன்.
- ‘மியூசிக்கல் சோ்’ மாதிரி நடந்து முடிந்த ‘ஸ்வாப்பிங் விளையாட்டு’ ஒருவழியாக இறுதி வடிவத்திற்கு வந்தது. முதல் வார நாமினேஷனில் இடம் பெறுபவர்கள் அஸிம், ராம், மகேஸ்வரி மற்றும் தனலக்ஷ்மி.
- இந்த ஒரு வாரத்தில், இந்தப் பட்டியல் எப்படியெல்லாம் மாறியது என்பது தொடர்பான சம்பவங்களைக் கவனித்தால் அவற்றில் நமக்கான பாடங்கள் உள்ளன. பிக் பாஸ் என்பது ஏதோ அயல் கிரகத்தில் நடக்கும் சமாச்சாரமில்லை. நம் வாழ்க்கையின் பிரதிபலிப்புதான்.
- சிறிய அளவிற்கான சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் கூட போதும், நம்முடைய உறவுகளுக்கு இடையே நிகழும் எத்தனையோ ரத்தப் பிறாண்டல் விபத்துக்களைத் தவிர்க்க முடியும். இந்த சீசன் மட்டுமல்ல, எந்த சீசனிலும் பிக் பாஸ் சம்பவங்கள் உணர்த்தும் அடிப்படையான பாடம் இதுதான். ஆனால் இந்த ஆதார நீதியை எடுத்துக் கொள்ளாமல் வம்புகளை மட்டுமே பேசுவது நமக்குத்தான் நஷ்டம்.
நாள் 5-ல் நடந்தது என்ன?
கிச்சன் கிளப்பிற்கு ‘ஐந்து ஸ்டார்கள்’ கிடைத்த சந்தோஷமான செய்தியோடு முந்தைய எபிசோட் முடிந்ததது. அப்புறம்? ஏதோ சாக்லேட் விளம்பரம் மாதிரி அனைத்து கிளப்களுக்குமே ஐந்து ஸ்டார்கள் கிடைத்தன.
பாத்திரம் கழுவும் அணிக்கு ஏகோபித்த பாராட்டு கிடைத்தது. “காஃபியை பாதிதான் குடிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள அதைப் பிடுங்கிட்டுப் போய் ஜனனி கழுவி வெச்சிட்டாங்க” என்று நையாண்டியாகப் பாராட்டினார் அமுதவாணன். இதைப் போலவே பாத்ரூம் கிளப்பின் ‘ரெட் கார்ப்பெட்’ வரவேற்பிற்கும் அவர்களின் நகைச்சுவை உணர்விற்கும் பாராட்டு கிடைத்தது.
“இதெல்லாம் ஓகே… ஆனா அவசரமா சுச்சா போற நேரத்துல நிறுத்தி வெச்சு ‘டிக்கிலோனா’ பண்ண வெச்சது கொஞ்சம் ஓவர்” என்றார் ஏடிகே. (இந்த விஷயம் நேற்றைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டது). ஆனால் அவர் இதைப் பெரிய குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் இதையே முத்து வேறு விதமாகப் பார்த்தார். “அப்படி டான்ஸ் ஆடிட்டே போனதில உள்ளே எல்லாம் ‘ப்ரீயா’ போச்சு’” என்று சொல்லி நகைச்சுவையாக்கினார். ஒரு சங்கடத்தைச் சந்தோஷமாகப் பார்க்கும் விஷயம் இது.
வீடு சுத்தம் செய்யும் அணிக்கும் 5 ஸ்டார்கள். அதிக பட்சமாக 14 ஸ்டார்கள் பெற்று ‘சிறந்த கிளப்’ என்னும் விருதைப் பாத்திரம் கழுவும் கிளப் பெற்றது. இந்த கிளப்பின் ஓனரான ஜனனி, அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெறுவார். (பார்றா..!)
சாந்தி, மகேஸ்வரி, ஷிவின் – உறவுகளில் மாறும் வானிலை
ஸ்வாப்பிங் டைம். இந்த வாரத்தின் கடைசி ஸ்வாப்பிங் என்பதால் இதுதான் இறுதிப் பட்டியலாக இருக்கும். எனவே, ‘கவனமாக ஆடுங்கள்” என்று அறிவுறுத்தினார் பிக் பாஸ். “நானே தொடர்ந்து இருக்கேன்… நோ ப்ராப்ளம்” என்று சொல்லி விட்டார் அஸிம். எனவே அதில் மாற்றமில்லை. இதைப் போலவே மாற்றம் எதுவுமில்லாமல் ராமை பட்டியலில் நீட்டிக்க வைத்தார் அமுதவாணன்.
கிச்சன் மற்றும் பாத்திரம் கழுவும் கிளப்பில்தான் வானிலை கணிசமாக மாறியது. மகேஸ்வரி மீது சாந்தி சொன்ன புகார்களைக் கேட்டுக் கொண்ட ஷிவின், சாந்தியை விடுவித்து மகேஸ்வரியை தூக்கி வாழைப்பழ பெட்டில் போட்டார். இந்த ஒரு வாரத்தில் இந்த மூன்று நபர்களின் உறவுநிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனிக்கலாம்.
சாந்தியும் மகேஸ்வரியும் ஆரம்பத்தில் நட்பாக இருந்தார்கள். ஷிவினப் பற்றி புறணி பேசினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் மகேஸ்வரிக்கும் சாந்திக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு மகேஸ்வரியின் ஆதிக்கத்தன்மைதான் பிரதான காரணம். யாரையும் பேச அவர் அனுமதிப்பதில்லை. எனவே ஷிவினின் பக்கம் சாய்ந்தார் சாந்தி. ஏனெனில் கிளப் ஓனரான ஷிவினிடம் ‘ஸ்வாப்பிங்’ என்னும் ஆயுதம் இருக்கிறது. ‘நட்பு முக்கியமா, தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்வது முக்கியமா?’ என்னும் போது நாம் எப்படியெல்லாம் ஊசலாட்ட மனநிலையில் விழுகிறோம் என்பதற்கான உதாரணம் இது. ஆக மகேஸ்வரி கடைசிப் பட்டியலில் வந்துவிட்டார்.
“நான் உங்களுக்கு பாஸ்-ன்னு எப்பவும் மரியாதை தருவேன். ஆனா மகேஸ்வரி அப்படியில்ல” என்று சாந்தி சொன்ன போது “நீங்களும்தான் அப்படி இருந்தீங்க. இப்ப ஸ்வாப்பிங் டைம்ன்றதால மாறிட்டிங்க” என்று சரியான கிடுக்கிப்பிடி கேள்வியை ஷிவின் வெளிப்படையாகக் கேட்டது சிறப்பு.
அடுத்தது பாத்திரம் சுத்தம் செய்யும் அணி. தனலக்ஷ்மி மீது முத்து சொன்ன புகார்களைக் கேட்டுக் கொண்ட ஜனனி, அப்படியே அந்தர்பல்டி அடித்து முத்துவைக் காப்பாற்றி தனலக்ஷ்மியைப் பலிகடாவாக்கினார். பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ்களும் வெளியிலுள்ள ரசிகர்களும் முத்துவிற்கு ஆதரவாக இருப்பது அவரது மனநிலையை மாற்றியிருக்கலாம். அல்லது உண்மையிலேயே தனலக்ஷ்மி மீது பிழையுள்ளது என்று ஜனனி கருதியிருக்கலாம்.
‘முத்துவின் வயதுக்கு மரியாதைத் தராமல் தனலக்ஷ்மி செயல்பட்டார்’ என்கிற காரணத்தைச் சொல்லி தனலக்ஷ்மியைத் தண்டனைப் பட்டியலில் போட்டார் ஜனனி. “பிக் பாஸில் வயது முக்கியமா, அனைத்துப் போட்டியாளர்களும் சமம்தானே?’ என்பது தனலக்ஷ்மியின் குற்றச்சாட்டு. பிக் பாஸ் இதர போட்டிகளைப் போல் அல்ல. ஒரு குடும்பத்தின் அமைப்பை அப்படியே நகலெடுப்பது. இங்கு அனைத்துப் போட்டியாளர்களும் சமம்தான் என்றாலும், கலாசாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றினால் கூடுதல் மதிப்பும் பார்வையாளர்களின் ஆதரவும் கிடைக்கும். இதைத்தான் ஜனனியும் சுட்டிக் காட்டுகிறார்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முக்கியமாகச் சொல்ல வேண்டும். ஜனனி பேசும் தமிழ் கேட்க இனிமையானதாக இருந்தாலும் அவரிடம் communication skill சிறப்பாக இல்லை. திக்கித் திணறிப் பேசுகிறார். சற்று அதட்டிக் கேட்டால் சொன்னதை மாற்றிவிடுகிறார். ஆனால் ஸ்வாப்பிங் விளக்கத்தைச் சபையில் சொன்ன போது தன் லீடர்ஷிப்பை சரியாகப் பயன்படுத்தியது சிறப்பு. இந்த இடத்தில்தான் ஷிவின் பின்வாங்குகிறார். முத்து ஓவராக விளக்கம் தந்து கொண்டிருந்த போது அவரைத் தடுத்து நிறுத்திய ஜனனி “உங்களுக்காகத்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்… அமருங்கோ” என்றது சிறப்பான காட்சி. ‘செல்லாக்குட்டி கலக்கிட்ட’ என்று ஜனனியைக் கட்டியணைத்துப் பாராட்டினார் ரச்சிதா.
“போட்டியாளர்களை ஒரே வயசுல போடறதுக்கு இது ரீல்ஸ் கிடையாது” என்று ஜனனி சொன்னதும் சர்ச்சையானது. தனலக்ஷ்மியின் சார்பாக ஆஜராகி ஜனனியிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார் விக்ரமன்.
‘ஆயிஷா மாதிரி ஒரு பிரெண்டு இருந்தா போதும்!’
‘ஊர்ல அவனவன் ஆயிரம் பிரெண்ட்ஸ் வெச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கான். நான் ஒரு பிரெண்டை வெச்சுக்கிட்டு… அய்யய்ய்யயோ…’ என்று சந்தானம் அனத்துவதைப் போல, ஆயிஷா மாதிரி ஒரு தோழமை இருந்தால் சிரமம்தான். அவர் நட்பைக் காப்பாற்றுவதெல்லாம் ஓகே. ஆனால் ஒரு பிரச்னையை எப்படியெல்லாம் குழப்ப முடியுமோ அதையும் தாண்டி தெளிவாகக் குழப்பிவிடுகிறார். ஒரு விஷயத்தை நிதானமே இல்லாமல் படபடவென்று பேசுகிறார். சற்று அழுத்திக் கேட்டால் “ஐயோ… எனக்குத் தெரியாதுப்பா” என்று சட்டென்று ரிவர்ஸ் கியர் போட்டு விடுகிறார்.
ஒரு எரியும் பிரச்னையை சாமர்த்தியமாக அணைப்பதுதான் நட்பிற்கு அழகு. மாறாக அழுது புலம்பும் தனலக்ஷ்மியிடம் “எழுந்து வா… நீயும் கேளு” என்பது முறையான அணுகுமுறையல்ல. மாறாக, ‘பிக் பாஸ் என்பது பெரிய வாய்ப்பு. இப்படி சின்ன விஷயத்திற்கெல்லாம் அழுது புலம்பி பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளாதே’ என்று தனலக்ஷ்மிக்குப் புத்திமதி சொல்லியிருக்கலாம்.
தனக்கு எதிராக ஜனனி பேசியதைக் கண்டு தனலக்ஷ்மி வெளிநடப்பு செய்து அழுததும் சிறுபிள்ளைத்தனம். ஆயிஷா, தனலக்ஷ்மி, ஜனனி ஆகிய மூவருமே தங்களின் வயதிற்கும் குறைவான மனமுதிர்ச்சியைக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. இதைப் போலவே ‘வெள்ளந்தி’ எனச் சொல்லப்படும் முத்துவும் ஒன்றுமே தெரியாத அப்பாவியல்ல. ஒரு சூழலைத் தனக்குச் சாதகமாக எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற சூட்சுமம் அறிந்தவராகவே இருக்கிறார். இங்கு யாரும் முழு வெள்ளந்தியல்ல என்பதுதான் இதன் நீதி.
வெளியே படுக்கும் வாழைப்பழத் தண்டனையைப் பெற்றாலும் ‘வானத்தைப் பார்த்து மல்லாக்க படுப்பது எவ்வளவு சுகம்!’ என்று வடிவேலுவின் வசனத்தை மேற்கோள் காட்டி தண்டனையையே மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டது முத்துவின் சாமர்த்தியம். இதைப் போலவே “உங்களைக் கூப்பிடறாங்க” என்ற போது “பஞ்சாயத்தா… அதெல்லாம் நான் வர முடியாது” என்று தவிர்த்ததும் அவரது நோக்கில் நல்ல முடிவு. ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டேயிருந்தால் புகைந்து கொண்டேதான் இருக்கும். மறக்க முயன்று முன்னேறுவதுதான் ஆக்கப்பூர்வமான வழி.
புதிய உற்சாகத்துடன் ரச்சிதா ஆர்மி…
நாள் 5 விடிந்தது. ‘பாண்டி நாட்டுக் கொடியைப் போல’ என்கிற பாடலை அலற விட்டார் பிக் பாஸ். அசலுக்கும் கவின்ஸிக்கும் இடையில் ஒரு டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. அசல் ‘கோளாறாக’ பேசும் தொனி, க்வின்ஸிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே எரிச்சலுடன் தொடர்ந்து தவிர்க்கிறார். ஆனால் தமிழ் சினிமா ஹீரோ மாதிரி தொடர்ந்து சென்று குறும்பு செய்கிறார் அசல். “நீ எனக்கு அக்காலாம் இல்ல” என்று அசல் ஆதங்கத்துடன் சொல்வதில் ஏதோவொரு செய்தி இருக்கிறது.
இந்த டிராக்கின் மூலம் க்வின்ஸிக்கு ஒருவகையில் நல்லதுதான் நடந்திருக்கிறது. அவர் அந்த வீட்டில் இருப்பதே இப்போதுதான் நமக்கு உறைக்கிறது. இதைப் போலவே நிவா, ஷெரினா, ராம் போன்றவர்களும் அந்த வீட்டில்தான் இருக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அந்த அளவிற்குத் தலைமறைவாக இருக்கிறார்கள்.
ரச்சிதாவிற்கு இன்று புதிதாக ஆர்மி உருவாகியிருக்கலாம். அல்லது ஏற்கெனவே ஆர்மி இருந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியிருக்காம். ஆம், இன்று அவர் சேலை கட்டி வந்த அழகைப் பார்த்து அசல் பாவனையாக மயக்கம் போட்டார். (அழகுல மயங்கறது இதுதானா?!). ராபர்ட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். (நீ ஊதவே வேணாம் மொமென்ட்!). “இவங்களுக்காகத்தான் சீரியலே பார்ப்பேன்” என்று ஏற்கெனவே சொல்லி இம்ப்ரஸ் செய்ய முயன்றதை ரிப்பீட் செய்தார். “க்ரஷ்ஷா இருந்தாதான் என்ன… அதுல தப்பில்ல” என்று சாந்தி சூசகமாகச் சொன்ன விஷயம் சூப்பர்.
பஸ்ஸர் போட்டிக்காக அவசரமாக ஓடியதில் கண்ணாடிக் கதவு மீது மகேஸ்வரியின் தலை முட்டிக் கொண்டதால் வீக்கம் ஏற்பட்டது. மற்றவர்கள் பதறி ஓடி வந்து முதலுதவி செய்தார்கள். ஆனால் உயிர்த்தோழியான சாந்தி இதைக் கவனிக்கவில்லை.
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சாந்தி விசாரிக்கச் சென்ற போது “ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க” என்று குத்தலாக மகேஸ்வரி சொல்ல அதற்காக மனம் புண்பட்டார் சாந்தி. மகேஸ்வரிக்கு சாந்தியின் மீது மனவருத்தம் இருக்கிறது. ஆனால் அவர் தன்னை வந்த விசாரிக்க வேண்டும் என்கிற விருப்பமும் உள்ளே இருக்கிறது. மனம் செய்யும் மாய விளையாட்டு இது. Love & Hate உறவிற்கான உதாரணம்.
கடந்த சீசனின் முதல் நாளில் கமல் தந்து அனுப்பிய ‘கடுகு டப்பா’வின் மர்மம் இன்னமும் கூட நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த சீசனில் இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே ஓப்பன் செய்துவிட்டார்கள். புதிர்ப்பெட்டியில் இருக்கும் ஸ்க்ராட்ச் கார்டைத் திறந்து பார்க்கும் வாய்ப்பு ஒருவருக்கு மட்டும் கிடைக்கும். அதற்கான போட்டி நடந்தது. காகித அம்பை மற்றவர்களை விடவும் அதிக தூரத்தில் எறிந்து வெற்றி பெற்றார் ஏடிகே.
“இந்தப் பெட்டியின் மூலம் உங்களுக்கு ஆச்சரியமும் கிடைக்கலாம், சங்கடங்களும் கிடைக்கலாம்” என்று ஆரம்ப நாளில் கமல் சொன்னது உண்மையாக ஆனது. ஏடிகேவிற்கு ‘ஜாக்பாட் பரிசு’ அடிக்கும் என்று எதிர்பார்த்தால் ஜாலியான தண்டனைதான் கிடைத்தது. ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர் யாராவது ஒருவரின் கை விசிறியாக இருக்க வேண்டுமாம்’. தனக்குச் சௌகரியமான நண்பரான அசலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் ஏடிகே.
தலைமைத்துவ வாய்ப்பைத் தவறவிட்ட ஷிவின்
முதல் வாரத்தின் இறுதிக்கட்ட தேர்வுகளுக்கு வந்துவிட்டோம். இரண்டு Best Performer-களை அனைவரும் கூடித் தேர்ந்தெடுக்க வேண்டும். சாந்தி மற்றும் முத்துவின் சேவை அருமையாக இருந்ததால் அவர்கள் தேர்வானார்கள். ஜனனி ஏற்கெனவே தலைவர் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார்.
அடுத்ததாக நெகட்டிவ் ஏரியா. ‘Worst Performer’ தேர்வு. ‘க்வின்ஸி என்கிற நபர் எங்குமே தட்டுப்படவில்லை’ என்று அனைவரும் ஏகோபித்த குரலில் சொன்னார்கள். அடுத்தது ‘வாரம் முழுவதும் முழுமையாகப் பங்கேற்காத போட்டியாளர்’ என்கிற தேர்வு. இதற்கு ஏகமனதாக ‘ஷிவின்’ தேர்வு செய்யப்பட்டார். ‘தன்னை அழகுபடுத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் அக்கறையை அவர் வேலை செய்வதிலும் காட்டியிருக்கலாம்’ என்று பரவலான விமர்சனம் சொல்லப்பட்டது. தனக்குக் கிடைத்த கிளப் ஓனர் வாய்ப்பை ஷிவின் சரியாகப் பயன்படுத்தாமல் தவற விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை.
Worst Performer-களான க்வின்ஸிற்கும் ஷிவினிற்கும் சிறைத் தண்டனை என்று முதலில் ஜெர்க் தந்த பிக் பாஸ் “சரி… இது முதல் வாரம். பொழச்சுப் போங்க’ என்று கருணையுடன் விட்டுவிட்டார்.
இன்று கமல் வரும் நாள். இந்த சீசனின் முதல் பஞ்சாயத்து நாள். “செல்லாக்குட்டி. கமல் உன்னை நிச்சயம் பாராட்டுவார்” என்று ஜனனியை ரச்சிதா கொஞ்சிப் பாராட்டியிருக்கிறார். ஜனனியும் அதற்கு அகம் மகிழ்ந்து போனார். அது நடக்குமா? பார்க்கலாம்.