Bigg Boss 6 Tamil Episode 7: ‘நயன்தாரா.. சிம்ரன்.. ஜிபி முத்துவிற்கு அடித்த டபுள் ஜாக்பாட்..! ஆறாம் சீசனின் 2-வது பஞ்சாயத்து.. கமல் என்ட்ரியில் நடந்ததென்ன?
Author: Vignesh17 October 2022, 2:00 pm
கலக்கலான காம்பினேஷனில் கமல் அணிந்து வந்திருந்த கோட், சூட் அட்டகாசம். கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி ஒருவேளை தங்கமாக இருந்திருந்தால், ‘விக்ரம்’ படத்தின் பாதி பட்ஜெட் அதற்கே செலவாகியிருக்கும். அத்தனை கனமான சங்கிலி.
இத்தனை பணக்காரத் தோற்றத்துடன் அரங்கிற்குள் வந்த கமல் ஏழ்மையைப் பற்றி அருமையாகப் பேச ஆரம்பித்தார். “உணவை வீணாக்கக் கூடாது என்கிற பாடத்தை கற்றுக் கொண்டதாக வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள். பட்டினிப் பட்டியலில் இருக்கும் 120 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துல இருந்தது. இப்ப 107-வது இடத்திற்கு முன்னேறியிருக்கு. மிச்ச கொஞ்ச நாடுகள் இருக்கேன்னு ஆறுதல் அடைய முடியாது. மழையில் பயிர் மூழ்கிப் போவது இயற்கையான விபத்து. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது முறையானதல்ல. இது அரசியல் சங்கு அல்ல. அபாயச் சங்கு” என்றெல்லாம் உணவு அரசியல் பேசிவிட்டு கமல் வீட்டிற்குள் சென்றார்.
‘நயன்தாரா… சிம்ரன்… ஹீரோ முத்துவிற்கு அடித்த டபுள் ஜாக்பாட்!’
எந்தவொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட போட்டியாளர் பெரும்பாலான மக்களுக்கும் சரி, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கும் சரி, பிடித்தமானவராக இருப்பார். அவரை அதிகம் ஃபோகஸ் செய்து சில காமெடி விஷயங்கள் நடக்கும். இந்த சீசனில் அது ஜி.பி.முத்து. அவரை காமெடி ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளாமல் ஒரு நாளும் முடிவதில்லை.
அகம் டிவிக்குள் வந்த கமல், ஸ்கிரிப்ட்டின் படி ஆரம்பத்திலேயே முத்துவை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார். முத்துவிற்காக ஒரு பெரிய தபால் பெட்டி வந்திருந்தது. அதன் உள்ளே ரசிகர்களின் கடிதங்கள். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியுலகத் தொடர்பு இருக்கக்கூடாது என்பது ஆட்டத்தின் அடிப்படையானதொரு விதி. எனவே இது பிக் பாஸ் டீம் உருவாக்கிய செட்அப்பாகத்தான் இருக்க வேண்டும். ஒரு பார்சலில் முருங்கைக்காய் இருந்தது.
முத்துவிற்கு வந்த கடிதங்களை அஸிம் உரத்த குரலில் படிக்க ஆரம்பித்தார். “தலைவரே… இரண்டு ஹீரோயின்களாட நீங்க ஹீரோவா நடிச்சா… யாரை செலக்ட் பண்ணுவீங்க?” என்பது முதல் கடிதம். இதே விஷயத்தை முத்து தன் வீடியோவில் செய்திருந்தால் ‘ஏலே செத்த மூதி. மூஞ்சி மோரையைப் பாரு.’ என்று பதில் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் இங்கோ வெட்கத்துடன் அமர்ந்திருந்தார். “பார்த்தீங்களா… எனக்கே வேட்டு வைக்கப் பார்க்கறீங்களே?” என்று கமல் கலாய்க்க “நயன்தாரா, சிம்ரன்” என்கிற இரண்டு பெயர்களை முத்து தயக்கத்துடன் சொன்னதும் சபை கலகலத்தது.
“வீட்டுக்குள்ள இருந்து ரெண்டு ஹீரோயின்களை செலக்ட் பண்றதா இருந்தா யாரைச் சொல்லுவீங்க?” என்று இந்த வம்பில் இன்னொரு வில்லங்கமான திரியைக் கிள்ளிப் போட்டார் கமல். இங்குதான் முத்துவின் புத்திசாலித்தனத்தைக் கவனிக்க வேண்டும். என்னதான் காமெடி என்றாலும், அவர் யாரைச் சொல்லியிருந்தாலும் ஒருவேளை தவறாகப் போயிருக்கலாம். எனவே “எல்லோருமே இங்க அக்கா தங்கச்சிங்கதான்” என்று வெட்கத்துடன் சமாளித்தது சிறப்பு. “அக்கா யாருமில்ல… தங்கச்சிங்கதான்’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார் அமுதவாணன். “வெட்கப்படாதீங்க” என்று கமல் வற்புறுத்திய பிறகு ‘அக்கா’ ரச்சிதாவையும் ‘தங்கச்சி’ ஜனனியையும் தேர்ந்தெடுத்தார் முத்து.
“தலைவரே… நீங்க சிங்கியா மங்கியா சொங்கியா” என்பது அடுத்த முக்கியமான கேள்வி. “ஏதோவொண்ணு விட்டுட்ட மாதிரி இல்ல?!” என்று கமல் குறும்பாகக் கேட்டு விட்டு கேமராவைப் பார்த்தார். அதாவது இந்த இடத்தில் நாம் கைதட்டிச் சிரிக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞை அது.
‘யாரைப் பிடிக்கும்… யாரைப் பிடிக்காது…’ – ஆரம்பித்தது வில்லங்கமான விளையாட்டு
“இந்தப் போட்டியில் யார் ஜெயித்தாலும் எனக்குச் சந்தோஷம்தான். சினிமாத்துறையிலும் நான் அப்படித்தான். மத்தவங்க வெற்றியை என் வெற்றியா பார்ப்பேன். வாய்ப்பு தேடி வரும்போது திறமைசாலிகளுக்கு ஈகோ இருக்கக்கூடாது. எத்தனை வாரங்கள் இங்கு இருப்பீர்கள் என்பதை விடவும் எத்தனை கவனிக்கப்படுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்களைப் பற்றி தவறான பார்வைகள் கூட உருவாகலாம். அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க.” என்பது போல் போட்டியாளர்களுக்கு உபதேசம் செய்தார் கமல்.
ஹவுஸ்மேட்ஸ்களின் இடையில் குடுமிப்பிடிச் சண்டைகளை உருவாக்கும் வழக்கமான வாரயிறுதிச் சடங்குகள் அடுத்து ஆரம்பித்தன. ‘இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்… இவரை மாதிரி இன்னொருத்தர் வீட்ல இருந்தா நல்லாயிருக்கும்’ என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விளையாட்டில் மெஜாரிட்டியான வாக்குகளைப் பெற்று தேர்வானவர் அமுதவாணன். (அப்ப முத்து வெறும் சைட் டிஷ் மட்டும்தான் போல). “என்ன சொல்றதுன்னு தெரியல… கண்ணு கலங்குது” என்று அமுதவாணன் ஃபீல் செய்ய, ‘அடுத்து இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு. அதையும் பார்த்துட்டு கண்கலங்குங்க’ என்பது மாதிரி அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் கமல்.
‘ஆணியே புடுங்க வேணாம்’ என்பது போல் ‘இந்த ஆளு இந்த வீட்டுக்கு வேணவே வேணாம்’ என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘நல்லாத்தானே போயிட்டு இருந்தது…’ என்று தயங்கிய மக்கள், மெல்ல தங்களின் அபிப்ராயங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். இந்த நெகட்டிவ் விளையாட்டில் கலவையான எதிர்வினைகள் வந்தாலும் பெரும்பான்மையோர் சுட்டிக் காட்டியது விக்ரமனை.
‘அரசியலில் இல்லாத கேளிக்கையா?’ – கமலின் அதிரடி பன்ச்
இறுக்கமும் சங்கடமும் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்த விக்ரமனிடம் “இந்தச் செய்தியோட அடிநாதத்தை நீங்க புரிஞ்சுக்கணும். இது வெளியுலகத் தீர்ப்பு அல்ல. உள்ள இருக்கறவங்கதான் தந்திருக்காங்க. இந்த சிவப்புக் கலரை நீங்க ஈஸியா மாத்திட முடியும்” என்றெல்லாம் பேசி அவரை உற்சாகப்படுத்தினார் கமல். “நான் இங்க போலியா இருக்க விரும்பலை. என்னால மத்தவங்க கிட்ட செயற்கையாகப் பேச முடியாது. நான் சார்ந்திருக்கும் துறை இறுக்கமானது. கேளிக்கைக்கான வெளி அங்கு இல்ல” என்றெல்லாம் விக்ரமன் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது “அரசியலில் இல்லாத கேளிக்கையா?” என்று அட்டகாசமான டைமிங்கில் கமல் உள்ளே புகுந்து சொன்னது, சரியான பன்ச் லைன்.
கமலின் தலை மறைந்ததும் ஸ்கூல் பிள்ளைகள் மாதிரி சளசளவென்று பேச ஆரம்பித்தார்கள். க்வின்சி தன்னைப் பற்றிச் சொன்ன ஒரு புகார், தவறான புரிதலில் ஏற்பட்டது என்பதைப் புரிய வைக்க விக்ரமன் அல்லாடிக் கொண்டிருந்தார். ஆனால் பதிலுக்கு க்வின்சி சொன்னது அவருக்குப் புரியவில்லை.
“ஜனனி எப்பவும் கேமரா கான்ஷியஸா இருக்கா” என்று சபையில் ஆயிஷா சொன்ன கமெண்ட், ஜனனியைப் புண்படுத்திவிட்டது போல. கண்கலங்கிய அவரை அணைத்து ஆறுதல் சொன்னார் ஷெரினா. “என்னைப் பழிவாங்கியது போல் தனலக்ஷ்மி நடந்து கொண்டது அநாகரிகம்” என்று இன்னொரு மூலையில் தன் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஏடிகே.
‘மரியாதையைக் கேட்டு வாங்கணும்… அது உரிமை’
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல், அடுத்து ஆரம்பித்த டாஸ்க்கில் அத்தனை சுவாரஸ்யமில்லை. ‘நீங்கள் தேடிய நட்பு… உங்களைத் தேடி வந்த நட்பு… இந்த ரெண்டு ஆட்டமும் எப்படியிருந்தது. விளக்குங்க” என்றார். “நானும் ராமும் நிறையப் பேசிப்போம். பிக் பாஸ் முடிஞ்சு எங்கெல்லாம் போகலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கோம்” என்று கதிரவன் சொல்ல “ஏம்ப்பா… இங்க எப்படி விளையாடறதுன்னு யோசிக்கறதை விட்டுட்டு” என்பது மாதிரி சிரித்துக் கொண்டே கமல் குறுக்கிட்டது சிறப்பு.
‘வாடா… போடா…’ விவகாரத்தில் அசல் கோளாறுக்கும் ஆயிஷாவிற்கும் இடையில் ஏற்பட்ட பழைய பஞ்சாயத்தையொட்டி கமல் பேசினார். “மரியாதை நமக்கு வேணுமின்னா கேட்டு வாங்கிக்கணும். அதுல தப்பேயில்லை. அது உரிமையும் கூட. ‘டேய்’ன்னு என்னைக் கூப்பிட்டா பிடிக்காது. இதை ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் சொல்ல முடியுமா… ஸோ… எல்லோரையும் ‘வாங்க… போங்க’ன்னு கூப்பிட ஆரம்பித்தேன்” என்று கமல் சார் நீட்டி முழக்கிச் சொன்னதை ‘கிவ் ரெஸ்பெக்ட்… டேக் ரெஸ்பெக்ட்’ என்பது மாதிரி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
க்வின்சிக்கும் விக்ரமனுக்கும் இடையில் ஏற்பட்ட தகவல் இடைவெளி குழப்பத்தைப் போலவே நிவாவிற்கும் அஸிமிற்கும் இடையில் ஏதோவொரு தவறான புரிதல் இருந்தது. சபையில் இதைப் பற்றி உருக்கமாகச் சொன்னார் நிவா. “ஓகே… உங்க கிட்ட இருந்து நான் விடைபெறுகிறேன்” என்று கமல் சொன்னதும் ‘ஹப்பாடா… ஷோ முடிஞ்சது போல’ என்று ஆறுதல் ஏற்பட்டது. ஆனால் அப்படியில்லை. அதற்குப் பிறகுதான் இன்னமும் நீட்டி முழக்கினார்கள்.
கமலின் தலை மறைந்ததும் ஹவுஸ்மேட்ஸ் தங்களின் விழுப்புண்களை ஆராயத் தொடங்கினார்கள். “என்னை வேற நாட்டில இருந்து வந்தவ என்றுதானே வித்தியாசப்படுத்திப் பார்க்கிறீர்கள்?” என்பது போல் அஸிமிடம் கண்கலங்கினார் நிவாஷினி. “இல்லம்மா தங்கச்சி. நீ கம்ப்ளீட்டா தலைகீழா புரிஞ்சுக்கிட்ட. அப்படி நீ ஃபீல் பண்ணக்கூடாதுன்னுதான் நான் சொன்னேன்” என்று நீண்ட விளக்கம் தந்தார் அஸிம் அண்ணன்.
‘சமகால அரசியலைக் கடந்த காலத்தில் பொருத்தாதீர்கள்’
‘விடைபெற்றுக் கொள்கிறேன்’ என்று சொல்லி முக்கியமான விஷயமான ‘புத்தகப் பரிந்துரை’யை கமல் தவற விட்டுவிட்டாரோ என்று நினைத்தால், அப்படியி்ல்லை. அரங்கிற்குத் திரும்பிய கமல் அதைத்தான் ஆரம்பித்தார். இந்த முதல் வாரத்தில் அவர் அறிமுகப்படுத்தியது, குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய ‘தஞ்சாவூர்’ என்கிற புத்தகம். இதை மிகச் சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் கமல் பரிந்துரை செய்தது சிறப்பான விஷயம்.
“நம் பெருமையைப் போற்ற வேண்டியது முக்கியம். ஆனால் தேவையில்லாத பெருமையைத் திணிக்கக்கூடாது. இப்போதைய அரசியல் சூழலை கடந்த காலத்தில் அப்படியே பொருத்திப் பார்க்கக்கூடாது. நமக்குக் கிடைத்த அசோகர், ராஜராஜசோழன், அக்பர் போன்ற சக்கரவர்த்திகள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் என்கிற பிரதேசம் வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வாறு இருந்தது என்பதை இந்த நூலில் பாலசுப்பிரமணியன் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். பாண்டியர், சோழர், மராட்டியர், கிருஷ்ண தேவராயர், பிரிட்டிஷ் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தஞ்சாவூர் என்கிற பிரதேசம் எப்படியிருந்தது என்பது இந்த நூலின் வழியாகத் தெரிகிறது.
ஒரு உதாரணம் சொல்றேன். ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் நிர்வாகம் எப்படியிருந்தது?
கோயிலில் எரியும் ஒரு விளக்கின் பின்னால் ஒரு மாட்டுப் பண்ணையே இருந்தது. அத்தனை விரிவான ஏற்பாடு. நீர் மேலாண்மை, சுங்கம் தவிர்த்தது என்று பல பெருமைகள் இருந்திருக்கின்றன. ஆய்வாளர்களுக்கு அரசியல் தெரியாது. சின்ன விளையாட்டுகளை அவர்கள் ஆட மாட்டார்கள். குடவாயில் அப்படியொரு சிறந்த ஆய்வாளர். இப்போதைய அரசியலை வைத்து நம்முடைய மூதாதையர்களை நாம் அவமதிக்கக்கூடாது. உண்மை என்பதைத் தராசில் வைத்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.”
புத்தகப் பரிந்துரை என்கிற விஷயத்தை வைத்துக் கொண்டு சமகால அரசியல் சர்ச்சை ஒன்றை கமல் அணுகிய பாணி அருமையாக இருந்தது. “இந்த நூலை படிச்சுப் பாருங்க. அப்புறம் அதுவா உங்களைப் பல பாதைகளுக்கு இட்டுச் செல்லும்” என்ற கமல், அடுத்தது ஒரு ஆச்சரியமான தகவலை வெளியிட்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் பறந்து வந்த மைனா
பிக் பாஸில் கூடுதலாக ஒரு போட்டியாளர். ஆம், அது ‘மைனா’ நந்தினி. சீசன் 6 தொடங்குவதற்கு முன்பே இவரது பெயர் பலமாக அடிபட்டது. என்ன காரணத்தினாலோ, ஒரு வாரம் கழித்து வந்து இணைகிறார். இது அவருக்குப் பலமாக அமையலாம். அல்லது பலவீனமாகவும் அமையக்கூடும். இதுவரை நடந்த விஷயங்களைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்.
ஓவர் உற்சாகத்துடன் மேடைக்கு வந்த நந்தினி, விக்ரம் படத்தில் ஓரமாக வந்து போனதற்கு அத்தனை சந்தோஷப்பட்டார். அவரைப் பற்றிய AV ஒளிபரப்பானது. “‘கலர் கம்மி… அழகா இல்ல’ என்று பல அவமானங்களைத் தாண்டி வந்திருக்கிறேன். ‘மைனா’ என்கிற பாத்திரம் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. என் சொந்தப் பெயரே மறந்து போகும் அளவிற்கு ஆனது. மனோரமா ஆச்சி மாதிரி ஆகணும்ன்றது என் கனவு. என் கணவர் யோகிதான் எனக்குப் பெரிய ஆதரவு. பையன் உருவத்துல இருக்கற அம்மா அவர்” என்றெல்லாம் உருகிப் பேசினார் நந்தினி.
மைனா வீட்டின் உள்ளே வருகிறார் என்பதற்காக மைனாக் குருவி போடும் சத்தத்தை ஏற்படுத்தினார்கள் (நல்ல குறியீடு!). ‘ஏற்கெனவே பாத்ரூம் பிரச்னை. இப்ப கூடுதலா ஒரு ஆளா?’ என்று மற்றவர்கள் மைண்ட் வாய்ஸில் ஜெர்க் ஆகியிருக்கக்கூடும். என்றாலும் பறந்து வந்த மைனாவை வலுக்கட்டாயமான புன்னகையுடன் வரவேற்றார்கள். ‘வெளில எப்படியிருந்தது?’ என்கிற இவர்களின் ஆவலான கேள்விகளுக்கு ரிப்போர்ட் தந்த நந்தினி “வாயைக் கிளறாதீங்கப்பா” என்று உள்ளே சென்றார். இதுவரை இத்தனை ஜாலியாகப் பேசாத ஷிவினிடம் திடீரென்று மாற்றம். “உங்க வீட்டுக்காரர் யோகியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நீங்க வெளில போறதுக்கு முன்னாடியே நான் உங்க வீட்டுக்குப் போயிடுவேன்” என்றெல்லாம் நந்தினியிடம் ஜாலியாகச் சொல்லி அவருக்கு ‘வெல்கம் ஷாக்’ தந்தார்.
ஏற்கெனவே மகேஸ்வரியின் டெஸிபல் தாங்கவில்லை. அவரை விடவும் நந்தினியின் குரல் உரத்து ஒலிக்கும் போலிருக்கிறது. இனி டிவி சவுண்டை கவனமாக கையாள வேண்டும். சுரத்தில் படுத்திருந்த முத்துவிற்கு உரிமையான கோபத்துடன் பாசத்தைக் காட்டினார் ரச்சிதா.
‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்கிற பாலிசியை அசல் பின்பற்ற ஆரம்பித்து விட்டாரோ, என்னமோ! ‘க்வின்சி’யிடம் கடலை வறுவல் எடுபடாததால் நிவாவிடம் நகர்ந்துவிட்டார் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா… இன்னும் இருக்கா’ என்கிற பாடல் மாதிரி, கார்டன் ஏரியாவின் இரவு நிழலில் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.