Bigg Boss 6 Tamil Episode 9: இது பிக் பாஸ் வீடா இல்ல ??? .. ‘நீதான் இந்த வீட்டோட பேபி’ – ஜனனிக்கு ஆறுதல் சொன்ன ராம்..!

Author: Vignesh
19 October 2022, 1:30 pm

‘கதை சொல்லும் நேரம்’ என்னும் அழுகாச்சி டாஸ்க்கைத் தூசு தட்டி ஆரம்பித்தார் பிக் பாஸ். ஆனால் இதில் சில விதிகள் இருந்தன. கதையை முழுதாகச் சொல்லி முடிப்பவர், அடுத்த வார நாமினேஷிலிருந்து தப்பித்து ஃப்ரீ ஸோனிற்குள் செல்ல முடியும்.

‘என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே’ என்கிற டாஸ்க்கை இன்று ஆரம்பித்துவிட்டார் பிக் பாஸ். பழைய சீசன்களில், இந்த அயிட்டம் வந்தாலே பல பார்வையாளர்கள் அலறிப் பிடித்து ஓடுவார்கள். ஏனெனில், கேமரா முன்னால் பல ஹவுஸ்மேட்ஸ் கண்ணீரைச் செயற்கையாகப் பிழிந்து எடுத்து ஆறாக ஓட விடுவார்கள். அதே சமயத்தில் சில போட்டியாளர்களின் உருக்கமான பின்னணியையும் நாம் அறிந்து கொள்ள முடியும். ‘இவங்களுக்கு என்னப்பா… ஜாலியா இருக்காங்க…’ என்கிற எண்ணம் மாறும்.

இந்த முறை சில விதிகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக் பாஸ். அதன் படி தங்களின் பிளாஷ்பேக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே சொல்ல முடியும். அதுவும் கூட சக ஹவுஸ்மேட்ஸ்களை கவர்ந்தால் மட்டுமே தொடர முடியும். அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ரேடியோ பெட்டி மாதிரி ஆஃப் செய்து விட்டுப் போய்விடுவார்கள்.

இப்படியாகக் கண்ணீர் டாஸ்க்கை சுருக்கியது ஒருபக்கம் நல்லதுதான் என்றாலும் இன்னொரு பக்கம் இதை உணர்வுக் கொலை என்றே சொல்லலாம். ஒருவர் தன்னுடைய பின்னணியின் உருக்கத்தை உணர்ச்சிகரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது “போதும்ப்பா… எனக்குப் பிடிக்கலை” என்று நிறுத்துவது நுண்ணுணர்வு சிறிதும் அற்ற செயல். இனி வரப் போகும் காலங்களில் பிக் பாஸ் விதிகள் இதை விடவும் கொடூரமாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

நாள் 9-ல் நடந்தது என்ன?

‘இனிமே இவிங்களுக்கு சோத்தை வடிச்சுக் கொட்டி என் டைமை வீணாக்கப் போறதில்லை. கேம்ல கவனம் செலுத்தப் போறேன்’ என்கிற முடிவில் இருக்கிறார் சாந்தி. தலைவர் போட்டியில் தோற்றது, இன்னமும் பாயின்ட் சம்பாதிக்காமல் இருப்பது போன்றவை தொடர்பான ஆதங்கம் அவருக்குள் இருக்கிறது.

“என்னைப் பத்தி இவங்களுக்கு இன்னமும் சரியாத் தெரியல. என்னமோ நெனச்சிட்டு இருக்காங்க” என்று ஆயிஷா, நிவாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் க்வின்சி. (‘என் பேரு மாணிக்கம்.. .எனக்கு இன்னொரு பேரு இருக்கு மொமன்ட்’). டான்ஸ் மாரத்தானில் கின்னஸ் சாதனை படைத்து விட வேண்டும் என்கிற கொலைவெறி பிளானாடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அசிம். இதற்காக அவ்வப்போது க்வின்சியை கூப்பிட்டு இவர் கிளாஸ் எடுக்க அவரோ டபாய்த்துச் செல்கிறார்.

bigg bodd day 9_updatenews360

‘அடுத்தடுத்து வந்த நடனமும் கண்ணீர்க் கதையும்’

நாள் 9 விடிந்தது. காப்பிரைட் பிரச்னை காரணமாக லேட்டஸ்ட் பாடல்களை பிக் பாஸால் போடமுடியவில்லை போல. எனவே பழைய பாடல்களை ஒலிக்க விட்டு ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார். ‘சலாசலா சலசலா’ பாடல் ஒலித்தது. என்னதான் தொழில்முறை டான்சர்கள் என்றாலும் சாந்தியும் ராபர்ட்டும் மனதைக் கவருமளவிற்கு இதுவரை ஆடவில்லை என்று தோன்றுகிறது.

டான்ஸ் மாரத்தான் ஆரம்பித்தது. ‘நீங்கதான் இதை ஆரம்பிச்சு வைக்கணும்’ என்று குரு வணக்கம் வைத்து ஜி.பி.முத்து மற்றும் ஏடிகே ஜோடியை அழைத்தார் பிக் பாஸ். ‘சொடக்கு மேல சொடக்குப் போடுது’ பாடல் பின்னணியில் அலறியது. அவசரத்தில் பேண்ட் பெல்ட் சரியாகப் போடவில்லையென்றாலும் கூட மேடையில் இறங்கிக் குத்தி ஆடினார் முத்து. ஏடிகே சம்பிரதாயத்திற்கு ஆட, மெஜாரிட்டி வாக்கில் முத்து வெற்றி. “அவராவது புதுசு… நீ ஒரு ரேப்பர்” என்று அசிம் சொன்னதை ஏடிகே உள்ளூர ரசிக்கவில்லை. “எனக்கு டான்ஸ் ஆட வராதுய்யா. ஏன் இவன் நோண்டிட்டே இருக்கான்?” என்பது போல் மற்றவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

bigg bodd day 9_updatenews360

‘கதை சொல்லும் நேரம்’ என்னும் அழுகாச்சி டாஸ்க்கைத் தூசு தட்டி ஆரம்பித்தார் பிக் பாஸ். ஆனால் இதில் சில விதிகள் இருந்தன. கதையை முழுதாகச் சொல்லி முடிப்பவர், அடுத்த வார நாமினேஷிலிருந்து தப்பித்து ஃப்ரீ ஸோனிற்குள் செல்ல முடியும். ஆனால் அவர்கள் சொல்லும் கதை சக ஹவுஸ்மேட்ஸ்களைக் கவர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். மூன்று பேர் எழுந்து வந்து அறுபது விநாடிகளுக்குள் பஸ்ஸரை அழுத்தினால் கதையை நிறுத்திவிட வேண்டியதுதான்.

ஆனால் பஸ்ஸரை அழுத்துபவரும் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும். அதிக முறை பஸ்ஸர் அழுத்தியவர் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் ஆவார். ஃப்ரீ ஸோன் செல்லும் வாய்ப்பு எட்டு பேருக்கு மட்டுமே என்பதால் இந்த விஷயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். பேச வருபவர்களின் வரிசை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் எண்ணைப் பெற்றவர் அசிம்.

‘கதை சொல்லத் தயங்கிய ஆயிஷா!’

ஷெரினா மற்றும் கதிரவன் குழு ஏதோ பேசிக் கொண்டிருக்க, அங்குச் சென்று ஏதோ சொல்ல முயன்றார் அசிம். ஆனால் அவர்களோ ‘சில்லறை இல்லப்பா… போயிட்டு அப்புறம் வா’ என்பது போல் ‘ஒரு நிமிஷம் இரேன்’ என்று சொல்லி விட அசிம் கோபித்துக் கொண்டார். ‘எனக்கு க்ருப்பிஸமே ஆகாது’ என்று உஷ்ணமாக அனத்திக் கொண்டிருந்தார். விளக்கம் சொல்ல வந்த ஷெரினா கண்கலங்க வேண்டியிருந்தது.

எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் ஆயிஷா டென்ஷனாக இருந்தார். ‘கதை சொல்லும் நேரத்தில்’ சொதப்பி விடுவோமோ என்கிற பதற்றம். ஏதாவது தவறான பிம்பம் வந்து விடுமோ என்கிற அச்சம். ‘உனக்கு தோணினதை மட்டும் பேசு. இல்லைன்னா சும்மா கூட உக்காந்துட்டு வா’ என்று மற்றவர்கள் ஆறுதல் சொன்னாலும் அம்மணிக்கு டென்ஷன் போகவில்லை. “ஏதாவது அரைகுறையா சொல்லி தப்பாயிடுச்சின்னா…” என்று அனத்திக் கொண்டிருந்தவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

bigg bodd day 9_updatenews360

கதை சொல்லும் டாஸ்க் ஆரம்பித்தது. எலும்புக்கூடு மாதிரி ஒல்லியான விளக்குகளை அமைத்து பேய் பங்களா மாதிரி ஆக்டிவிட்டி ஏரியாவை மாற்றியிருந்தார் பிக் பாஸ். சந்திரமுகி மாளிகையில் நுழையும் வடிவேலு மாதிரி பயந்து கொண்டே சென்றார் அசிம். “சினிமால நடிக்க என் பெற்றோர் தடை சொல்லல. திருமணம் ஆச்சு. ஆனா…” என்று அசிம் கதையைத் தொடர்வதற்குள் மூன்று விளக்குகள் எரிந்ததால் அவர் வெளியேற வேண்டியிருந்தது.

‘அதனால என்ன… உன் கதையை இப்ப சொல்லு’ என்று மற்றவர்கள் கேட்டதால், விவாகரத்து காரணமாக தன் மகனை ஞாயிறு அன்று மட்டுமே பார்க்க முடிகிற துயரத்தைச் சொன்னார் அசிம். “ஆக்சுவலி நீ கதையை இங்க இருந்து ஆரம்பிச்சிருக்கணும்” என்று திரைக்கதை ஐடியா சொல்லி ஆச்சரியப்படுத்தினார் சாந்தி. (டான்ஸ் மாஸ்டருக்குள்ள ஒரு டைரக்டர்!).

அழுகாச்சி டாஸ்க், டான்ஸ் கொண்டாட்டம் ஆகிய இரண்டையும் மாற்றி மாற்றிக் காண்பித்துச் சலிப்பு வராமல் பார்த்துக் கொண்டது எடிட்டிங் டீமின் சாமர்த்தியம். ‘வர்றியா’ என்கிற பாடலுக்கு மணிகண்டனும் தனலக்ஷ்மியும் மேடையேறி ஆடினார்கள். இரண்டு பேரின் ஆட்டமும் சமமாக இருந்தாலும் தனலக்ஷ்மியின் குத்து சற்று உக்கிரமாக இருந்ததால் அவரே வெற்றி.

உருக்கமாகக் கதை சொல்லி வெற்றி பெற்ற தனலக்ஷ்மி, நிவாஷினி…
அடுத்ததாகக் கதை சொல்ல வந்தவர் தனலக்ஷ்மி. ‘அப்பா இல்லாத குடும்பத்தில் அம்மா மட்டும் தன்னந்தனியாக நின்று குடும்பத்தை வளர்த்த துயரமான பின்னணியை’ தனலக்ஷ்மி உருக்கமாகச் சொல்ல எவருக்கும் பஸ்ஸர் அடித்து நிறுத்தத் தோன்றவில்லை. முத்துவும் ஷிவினும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆக… தனது டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அடுத்த வார ஃப்ரீ ஸோனிற்குள் செல்கிறார் தனலக்ஷ்மி.

bigg bodd day 9_updatenews360

‘கருத்தவன்லாம் கலீஜாம்…’ என்கிற குத்துப் பாடலுக்கு அசலும் ராமும் ஆடினார்கள். அசல் இறங்கிக் குத்த, ராம் சம்பிரதாயத்திற்குக் கூச்சத்துடன் உடலை அசைத்தார். அப்போதே இதன் விடை தெரிந்து விட்டது. ‘நீதாண்டா வின்னு’ என்று அசலிடம் ராம் சொல்லிக் கொண்டிருந்தார். தோற்றவரின் 200 பாயின்ட்டும் இணைந்து வெற்றி பெற்றவருக்கு 400 பாயின்ட்டுகள் வரும்.

அடுத்துக் கதை சொல்ல வந்தவர் நிவாஷிணி. “இளம் வயதில் சக மாணவர்களின் கேலி மற்றும் அடிகளால் மிகவும் துன்பப்பட்டேன். கண்ணாடியில் என்னைப் பார்க்க பிடிக்கலை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது” என்றெல்லாம் நிவா விவரித்தது உருக்கமாக இருந்ததால் எவரும் பஸ்ஸர் அடிக்கவில்லை. “டிவில பார்க்க நீ அம்பூட்டு அழகா இருக்கே” என்று மக்கள் சொன்னதற்கு நிவா மிகவும் மகிழ்ந்தார்.

அடுத்துப் பேச வேண்டியவர் ஜனனி. “அவ பேசும் போது நான் பஸ்ஸர் அடிச்சா பிரச்னையாயிடும். ஏற்கெனவே அவளுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு” என்று முன்கூட்டியே தனலக்ஷ்மி சொல்லிக் கொண்டிருக்க “அவ பேசவே ஆரம்பிக்கலை… அதுக்குள்ள ஏன்” என்று சரியான ஆட்சேபத்தைச் சொன்னார் மணிகண்டன். இந்த இடத்தில் வீட்டின் தலைவர் முத்துவின் தலையீடு சரியாக அமைந்தது. “இப்ப கிச்சன்லதானே உனக்கு வேலை? அதை மட்டும் பாரு” என்று தனலக்ஷ்மியிடம் சொன்னது சரியான லீடர்ஷிப்பைக் காட்டியது. (கலக்கிட்டீங்க முத்து!).

‘நீதான் இந்த வீட்டோட பேபி’ – சூப்பர் ஆறுதல் சொன்ன ராம்

ஜனனி பேச வந்தார். “எங்களுடையது சாதாரண குடும்பம். நான் படிக்கவும் வேணும்… வேலைக்குச் செல்லவும் வேணும்” என்று அவர் தொடரும் போது மூன்று பஸ்ஸர்கள் அடிக்கப்பட்டன. பஸ்ஸர் அடிக்க ஓடி வந்தவர்களுள் ஒருவர் தனலக்ஷ்மி. (ஏன் இந்தக் கொலைவெறி?!)

bigg bodd day 9_updatenews360

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் ‘ஒருவர் தன் உருக்கமான பின்னணியைச் சொல்ல ஆரம்பிக்கும் போது தொண்டையைப் பிடித்து அழுத்தி நிறுத்துவது ஒருவகையான உணர்வுக்கொலை. ‘தோற்று விட்டோமே என்றோ அல்லது தன் கதையைக் கேட்கக்கூட யாருக்கும் விருப்பமில்லையா’ என்றோ.. தெரியவில்லை. ஜனனி கண்கலங்க மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள். இதில் ராம் சொன்னது சிறப்பாக இருந்தது. “நீ இந்த வீட்டோட பேபி” என்று ஆரம்பித்து அவர் சொன்னது ஆத்மார்த்தமான ஆறுதல். முதன்முறையாகப் பார்வையாளர்களை ராம் கவர்ந்த தருணம் இதுவாகத்தான் இருக்கும்.

bigg bodd day 9_updatenews360

‘பாக்கு வெத்தலை மாத்தி வெச்சு’ என்கிற குத்துப்பாடலுக்கு மகேஸ்வரியும் ஷிவினும் ஆடினார்கள். ஷிவினை விடவும் மகேஸ்வரியின் ஆட்டத்தில் நளினம் அதிகம் இருந்தது. ஆனால் மக்கள் ஷிவினைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அடுத்ததாகக் கதை சொல்ல வந்தவர் ஏடிகே. “எனக்குச் சின்ன வயசுல தாழ்வு மனப்பான்மை அதிகம். அதனால் நிறைய இழந்திருக்கேன். திருமணத்திற்காக மதம் மாறினேன்… ஆனால் அந்தத் திருமணம் நீடிக்கலை” என்று அவர் தொடர்ந்த போதே மூன்று விளக்குகளும் எரிந்தன. உள்ளே வருத்தப்பட்டாரோ, என்னமோ.. ஆனால் முகத்தை ஸ்போர்டிவ்வாக வைத்துக் கொண்டு வந்த ஏடிகேவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

bigg bodd day 9_updatenews360

பொதுவாக இந்த ‘அழுகாச்சி டாஸ்க்’ சலிப்பூட்டக் கூடியதுதான். ஆனால் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் பல போ்களின் பின்னணியில் நிறையச் சோகம் இருக்கிறது என்பதை ஆத்மார்த்தமாக உணர்த்தும் பகுதி. ஒருவர் பேச ஆரம்பிக்கும் போதே அவரின் கழுத்தைப் பிடித்து நெறிப்பது கொடூரமான ரூல். கேமை சுவாரஸ்யப்படுத்துவதற்காக இது போன்ற நுண்ணுணர்வற்ற விதிகளை பிக் பாஸ் ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!