அமரன் ஓடிடி ரிலீஸுக்கு சிக்கல்.. பொறியியல் மாணவரின் மனுவால் பரபரப்பு!
Author: Hariharasudhan4 December 2024, 6:13 pm
அமரன் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாகீசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: சென்னை அழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் வாகீசன். பொறியியல் மாணவரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், “தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் (Mobile Calls) வந்ததால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
இதனால் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. அரசியல் சாசனம் எனக்கு வழங்கியுள்ள வாழ்வுரிமை, அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுவதால் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும்.
அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்திற்கு வழங்கிய தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். எனது மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இதையும் படிங்க: பவர் ஸ்டாருக்கு வந்த பரிதாப நிலை..திடீரென மருத்துவமனையில் அனுமதி…!
என்னால் படிக்க முடியவில்லை, எங்கும் பயணிக்க முடியவில்லை. மொபைலை ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றுவதற்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் தான் காரணம் எனச் சொல்ல தேவையில்லை. இதுகுறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றும், அந்த தவறை அவர்கள் திருத்தவில்லை” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் படத்தில், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வணிக வெற்றியையும் பெற்றது.
இந்தப் படத்தில் சாய் பல்லவியின் மொபைல் எண்ணாக காண்பிக்கப்படும் எண்ணே வாகீசனின் எண் என்று, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரிப்பதாகவும், இப்படத்தின் மீது எதிர்ப்புகள் கிளம்பி, ஆர்ப்பாட்டம் என்பது வரை சென்றது. இப்படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.